நித்திய ஜீவனை தேர்ந்தெடுப்பீர்!
எதை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் திக்குமுக்காடும் அளவுக்கு எக்கச்சக்கமான தெரிவுகளை இன்றைக்கு பலர் எதிர்ப்படுகிறார்கள். உதாரணமாக, என்ன டிரெஸ் போட்டுக்கொள்வது, என்ன சாப்பிடுவது, எங்கே வேலை பார்ப்பது, எங்கே குடியிருப்பது என்றெல்லாம் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. உலகின் அநேக பகுதிகளில், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதும் வழக்கம். ஆனால் இந்த எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் ஒரு தெரிவை பைபிள் உங்கள் முன் வைக்கிறது—அது அனைத்து மனிதகுலத்தின் முன்னும் வைக்கப்படும் ஒரு தெரிவு.
“நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:19, பொது மொழிபெயர்ப்பு) மேலும், இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.
ஆம், நித்திய ஜீவனுக்குரிய பாதையில் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை படைப்பாளர் நமக்குத் தருகிறார்! அப்படியானால், நித்திய ஜீவனைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
“நீதியின் பாதையில் ஜீவன் உண்டு” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:28) நித்திய ஜீவனுக்குரிய பாதையில் நடைபோடும் நீதிமான்களில் ஒருவராக நாமும் இருக்கலாம். எப்படி? நமது வாழ்க்கையை கடவுளுடைய சித்தத்திற்கும் அவருடைய கட்டளைகளுக்கும் இசைவாக மாற்றியமைப்பதன் மூலமே. (மத்தேயு 7:13, 14) ஆகவே நாம் சரியான தெரிவை செய்வோமாக! நித்திய ஜீவன் எனும் பரிசை பெறுவோமாக!—ரோமர் 6:23.