வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஏசாயா 30:20, “உன் கண்கள் உன் மகத்தான போதகரை காணும்” என்று யெகோவா நமக்கு முன்னால் இருப்பதைப் போல் சொல்கிறது, ஆனால் அடுத்த வசனத்திலேயே அவருடைய வார்த்தை “உங்களுக்குப் பின்னாலே” இருந்து வருகிறது போல் ஏன் பேசுகிறது?
ஏசாயா 30:20 (NW), 21 இவ்வாறு சொல்கிறது: “உன் மகத்தான போதகர் இனி மறைந்திருக்க மாட்டார், உன் கண்கள் உன் மகத்தான போதகரை காணும். நீங்கள் வலது புறமாய்ச் சாயும்போதும், இடது புறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”
இந்த வசனங்களை சொல்லர்த்தமாக எடுத்துக்கொண்டால், மகத்தான போதகராகிய யெகோவாவை வாசகர் தனக்கு முன்னால் இருப்பது போல் பார்க்கிறார், ஆனால் அவருடைய சத்தத்தையோ பின்னாலிருந்து கேட்கிறார். இந்த வார்த்தைகளை அடையாளப்பூர்வமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
20-ம் வசனத்தில் உள்ள உருவக அணி, எஜமானருக்கு சேவை செய்ய தயாராக இருக்கும் ஓர் ஊழியக்காரனை வாசகர் மனக்கண்முன் கொண்டு வருகிறது. எஜமானர் கைகாட்டினால் போதும், அவருடைய கட்டளையை நிறைவேற்ற கவனமாக அவரையே பார்த்துக் கொண்டிருக்கிற ஓர் ஊழியக்காரனைப் போல, பூமிக்குரிய அமைப்பின் வாயிலாக யெகோவா படிப்படியாக தரும் பைபிள் அடிப்படையிலான போதனைகளின் மீது இன்றைக்கு அவருடைய ஜனங்கள் தங்களுடைய கண்களை ஊன்ற வைக்கிறார்கள். (சங்கீதம் 123:1, 2) ஆம், அவருடைய கட்டளையின்படி செயல்பட காத்திருக்கிறார்கள், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலம் யெகோவா சுட்டிக்காட்டுகிற எல்லாவற்றிற்கும் விழிப்புடன் தயாராக இருக்கிறார்கள்.—மத்தேயு 24:45-47, NW.
அப்படியானால், அவருடைய ஊழியக்காரர் பின்னாலிருந்து வரும் வார்த்தையைக் கேட்பதைப் பற்றியென்ன? பின்னாலிருந்து வரும் சத்தம் என்பது கடந்த காலத்தில் கடவுள் உரைத்த சத்தம், அதாவது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்வதற்கு ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ மூலம் அவர் நம்மிடம் பேசுகிற சத்தம் என்ற முடிவுக்கு வரலாம். (லூக்கா 12:42) கடவுளுடைய நவீனகால ஊழியர்கள் பைபிளை ஊக்கமாய் படிப்பதன் மூலம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறார்கள். அதோடு, ‘உண்மையுள்ள விசாரணைக்காரனாகிய’ “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் வெளியிடப்படும் பிரசுரங்களின் உதவியால் அதன் நியமங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவதன் மூலமும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறார்கள். விழிப்புடன் இருந்து மகத்தான போதகர் தரும் காலத்திற்கேற்ற வழிநடத்துதலை சார்ந்திருப்பதாலும், நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதாலும் அவருடைய ஊழியர்கள் அடையாளப்பூர்வமாக அவரை தங்கள் முன்னால் காண்கிறார்கள், அவருடைய சத்தத்தை பின்னாலிருந்து கேட்கிறார்கள்.—ரோமர் 15:4.