அவளுடைய விடாமுயற்சி பலனளித்தது!
நல்மனம் படைத்த அநேகர் தங்களுக்குப் பிரியமானவர்கள் கடவுளுடைய நோக்கங்களை கற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என விரும்புகிறார்கள். ஒருவர் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும்படி ஞானமான தீர்மானத்தை எடுப்பதற்கு மற்றவர்களின் நல்நடத்தை துணைபுரிகிறது; அவர்கள் இளைஞராகவும் இருக்கலாம், முதியவராகவும் இருக்கலாம். மெக்ஸிகோவைச் சேர்ந்த கேயாரிம் என்ற இளம் பெண் இதற்கு ஓர் உதாரணம். யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷித்த மாநாட்டு தினத்தின் போது பொறுப்புள்ள சகோதரர்களிடம் அவள் இவ்வாறு எழுதிக் கொடுத்தாள்:
“என்னுடைய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கான காரணத்தையும் சொல்கிறேன். பதினெட்டு வருஷங்களுக்கு முன்பு, அதாவது நான் பிறப்பதற்கு முன்பே என் அப்பாவும் அம்மாவும் சத்தியத்தை கற்றுக்கொண்டார்கள். அம்மா சத்தியத்தை படித்து முன்னேறினார்கள், பிற்பாடு என் தம்பியும் நானும் கூட படித்து முன்னேறினோம். அப்பாவும்கூட சத்திய பாதையில் எங்களோடு நடக்க வேண்டும் என யெகோவாவிடம் நாங்கள் சேர்ந்து ஜெபித்தோம். பதினெட்டு வருஷங்கள் ஓடிவிட்டன, ஆனால் இன்று எங்களுக்கு மிகவும் விசேஷித்த நாள். ஏனென்றால் எங்களுடைய அப்பா முழுக்காட்டுதல் பெறப் போகிறார். நாங்கள் வெகு காலமாக ஆவலோடு காத்திருந்த இந்த நாள் வருவதற்கு முன்பாக யெகோவா முடிவை கொண்டு வராதிருந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். யெகோவாவுக்கு நன்றி!”
பல வருடங்களாகவே, 1 பேதுரு 3:1, 2-ல் கடவுள் பதிவு செய்திருக்கும் புத்திமதியிலுள்ள நியமங்கள் இந்த பெண்ணுடைய குடும்பத்தாரின் மனதில் இருந்தன. அந்த வசனம் இவ்வாறு கூறுகிறது: “மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.” கேயாரிம்கூட உபாகமம் 5:16-ஐப் பின்பற்றினாள் என்பதில் சந்தேகமில்லை. “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என அந்த வசனம் கூறுகிறது. இப்படிப்பட்ட நியமங்களை பின்பற்றி பொறுமையுடன் யெகோவாவுக்குக் காத்திருந்ததால் கேயாரிமும் அவளுடைய குடும்பத்தாரும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.