வாழ்வதற்கு மிகச் சிறந்த காலம்
சோதனைமிக்க சூழ்நிலைகள் வரும்பொழுது, “பொன்னான கடந்த காலத்தை” எண்ணி நீங்கள் ஏங்குகிறீர்களா? அப்படியானால் ஞானியாகிய சாலொமோன் அரசனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இந்நாட்களைப் பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக் குறித்துக் கேட்பது ஞானமல்ல.”—பிரசங்கி 7:10.
சாலொமோன் ஏன் இந்த அறிவுரையைக் கொடுத்தார்? ஏனென்றால் கடந்த காலத்தைப் பற்றிய எதார்த்தமான நோக்குநிலை, தற்போதைய மோசமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக சமாளிக்க பேருதவியாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். “பொன்னான கடந்த காலத்தை” எண்ணி ஏங்குகிறவர்கள் அந்த நாட்களும் பிரச்சினைகளாலும் உபத்திரவங்களாலும் நிறைந்திருந்ததையும், வாழ்க்கை ஒருகாலும் உண்மையிலேயே மேம்பட்ட வாழ்க்கையாக இல்லை என்பதையும் மறந்துவிடலாம். கடந்த காலத்தில் நிகழ்ந்த சில காரியங்கள் சிறந்தவையாக இருந்திருக்கலாம், ஆனால் பெரும்பாலானவை அப்படி அல்ல. சாலொமோன் சொன்னபடி, தேவையில்லாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது ஞானமல்ல, ஏனென்றால் நம்முடைய காலக் கடிகாரத்தை நாம் பின்னோக்கி திருப்ப முடியாது என்பது அறிந்ததே.
கடந்த காலத்தைக் குறித்து ஏக்கத்தோடு நினைத்துப் பார்ப்பதில் ஏதாவது தீமை இருக்கிறதா? ஆம், வளைந்து கொடுப்பவர்களாகவும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றியமைத்துக் கொள்கிறவர்களாகவும் இருக்கவிடாமல் செய்யுமாகில், அல்லது நாம் வாழும் காலத்தையும் நமக்கு இருக்கும் நம்பிக்கையையும் நன்றியோடு மதித்துணருவதை தடை செய்யுமாகில் அது தீமையாக இருக்கும்.
சொல்லப்போனால், உலக பிரச்சினைகள் அதிகரித்து வருகிறபோதிலும், வாழ்வதற்கு இதுவே மிகச் சிறந்த காலம். ஏன்? ஏனென்றால் பூமிக்காக கடவுள் கொண்டுள்ள நோக்கம் வெகு விரைவில் நிறைவேறப் போகிறது, சமாதானம் தவழும் அவருடைய ராஜ்ய ஆட்சியில் அநேக ஆசீர்வாதங்களை அப்பொழுது அனுபவிப்போம். பைபிள் இவ்வாறு வாக்குறுதி தருகிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) அப்பொழுது நிலைமைகள் மிகவும் மேம்பட்டு விளங்கும் என்பதால், “பொன்னான கடந்த காலத்தை” எண்ணி யாருமே ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது.