சிறந்த ஒழுக்க தராதரங்களை முன்னேற்றுவிக்க முயற்சிகள்
2001-ம் ஆண்டின் பிற்பகுதியில் மொசாம்பிக்கின் தேசிய வானொலி ஒலிபரப்பை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பின்வரும் இந்த அறிவிப்பை கேட்டார்கள்:
“மபூடோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக கட்டடங்களை குடியரசு தலைவர் பார்வையிட்டார். குடும்ப வட்டாரங்களில் சிறந்த ஒழுக்க தராதரங்களை முன்னேற்றுவிப்பதிலும் எழுத்தறிவு திட்டங்கள் வாயிலாக வயது வந்தவர்களுக்கு கல்விபுகட்டுவதிலும் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தும்படி அந்த சபையாரை உற்சாகப்படுத்தினார். இத்திட்டங்கள் வாயிலாக ஏற்கெனவே சுமார் 10,000 பேர் பயனடைந்துள்ளனர். இதுபோன்ற திட்டங்கள் பாராட்டத்தக்கவை, ஏனெனில் இந்த நாடு கல்வி சம்பந்தமாக இன்னமும் எதிர்ப்பட்டு வரும் பிரச்சினைகளை தீர்ப்பதில் இவை சமுதாயத்திற்கு சிறந்த பயனாற்றுகின்றன என்று குடியரசு தலைவர் ஷிஸ்ஸானூ குறிப்பிட்டார்.”
மேலும், பதிவு செய்யப்பட்டிருந்த குடியரசு தலைவரின் பேச்சிலிருந்து ஒரு பகுதியையும் அது அறிவித்தது: “படிப்பறிவில் அநேகர் அக்கறை காட்டுவதை காண்பது எங்களுக்கு அதிக உற்சாகத்தை அளிக்கிறது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் விழுக்காட்டை அதிகரிக்க எங்களுக்கு கைகொடுக்கப் போகிறவர்கள் சாதாரண குடிமக்களே என்பதை இது காட்டுகிறது. ஆகவே, எந்த மொழியாக இருந்தாலும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் படிப்பறிவு திட்டங்களை தீவிரப்படுத்தும்படி அவர்களை உற்சாகப்படுத்துகிறேன். மக்கள் படிப்பறிவைப் பெறுவதும், மிக எளிதாக பேச்சுத்தொடர்பு கொள்வதும், எதிர்காலத்தில் கல்வியில் பெரும் பங்கை ஏற்பதுமே முக்கியம்.”
ஜனங்கள் தாங்களாகவே கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்காக மொசாம்பிக்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தேசம் முழுவதிலும் 850 இடங்களில் படிப்பறிவு வகுப்புகளை நடத்துகிறார்கள். அது தவிர, அவர்கள் ஒவ்வொரு வாரமும் இலவசமாக சுமார் 50,000 வீடுகளில் பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். இவை யாவும் உலகளாவிய பைபிள் கல்வி திட்டத்தின் பாகமாகும். இன்று இவை 235 தேசங்களில் நடைபெற்று வருகின்றன. (மத்தேயு 24:14) நீங்களும் இத்திட்டத்திலிருந்து பயனடையலாம். உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை நீங்கள் தாராளமாக அணுகலாம்.