“உன் அந்திய காலத்தில் நீ ஞானமுள்ளவனாயிரு”
“மனிதரில் பெரும்பாலோர் தங்கள் அந்தியகாலத்தில் வருந்துமளவுக்கு இளமைகாலத்தில் வாழ்கிறார்கள்.” இவ்வாறு கூறியவர் ஷான் டி லே புரூயர் என்ற 17-வது நூற்றாண்டு பிரெஞ்சு கட்டுரையாளர் ஆவார். ஓர் இளைஞன், சட்டென்று சரியான முடிவெடுக்க தெரியாமல் தடுமாறி, கடைசியில் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அனுபவிக்கலாம். மறுபட்சத்தில், பிடிவாதமான ஓர் இளைஞன் ஞானமில்லாத போக்கையே விடாப்பிடியாக நாடி, பிற்காலத்தில் மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு நிற்கலாம். இந்த இரு சந்தர்ப்பங்களிலுமே, செய்ய வேண்டியதை செய்யாமற்போவதால் அல்லது செய்யக்கூடாததை செய்வதால் கணிசமான வருத்தத்தை அனுபவிக்க நேரிடும்.
அப்படியொரு முடிவை தவிர்க்க என்ன வழி? இளமையில் சட்டென்று முடிவெடுக்க தெரியாத இயல்பைக் குறித்து எச்சரிக்கும் வகையில், “ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. ‘வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே’ என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை” என கடவுளுடைய வார்த்தை இளைஞருக்கு அறிவுரை கொடுக்கிறது. (பிரசங்கி [சபை உரையாளர்] 12:1, பொது மொழிபெயர்ப்பு) நீங்கள் இளைஞர் என்றால், உங்கள் இளமைப் பருவத்தில் ‘உங்களைப் படைத்தவரை’ பற்றி கற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
இளமைக்கே உரிய துடுக்குத்தனத்தை தவிர்க்க இளைஞருக்கு பைபிள் எப்படி உதவுகிறது? அது கூறுவதாவது: “உன் அந்திய காலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.” (நீதிமொழிகள் 19:20) இளமையோ முதுமையோ எந்த வயதானாலும் சரி, அசட்டை மனப்பான்மையாலோ கலகத்தனமான போக்காலோ கடவுளுடைய ஞானத்தை நிராகரித்தால் வருத்தகரமான விளைவை சந்திக்க நேரிடும் என்பதையும் பைபிள் தெளிவாக காண்பிக்கிறது. (நீதிமொழிகள் 13:18) அதற்கு மாறாக, கடவுளுடைய நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிவது, “நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும்” தரும்; அதாவது திருப்தியான, மனநிறைவான வாழ்க்கையைத் தரும்.—நீதிமொழிகள் 3:2.