வாசிக்க கற்றுக்கொண்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சி!
சாலமன் தீவுகளின் சில பகுதிகளில், இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் 80 சதவீதத்தினர் எழுத்தறிவின்மையோடு போராட வேண்டியதாயிருக்கிறது. இதனால் வாராந்தர சபை கூட்டங்களில் அவர்கள் அதிகமாக பங்கெடுக்க முடிவதில்லை, ராஜ்ய சத்தியங்களை பிறருக்கு கற்பிப்பதும் அவர்களுக்கு அதிக கஷ்டமாக இருக்கிறது. ஒருபோதும் பென்சிலை கையில்கூட பிடித்திராத பெரியவர்கள் வாசிக்க கற்றுக்கொள்வது உண்மையிலேயே சாத்தியமா?
வாசிக்கவும் எழுதவும் சிரத்தையெடுங்கள் (Apply Yourself to Reading and Writing) என்ற சிற்றேட்டை யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்திருக்கின்றனர்; சாலமன் தீவுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும் இந்தச் சிற்றேடு எழுத்தறிவு வகுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகுப்புகள் வாயிலாக நூற்றுக்கணக்கானோர் தங்களுடைய திறமையை முன்னேற்றுவிக்க எவ்வாறு உதவி அளிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன. மிக முக்கியமாக, வாசிக்க கற்றுக்கொண்டதால் தங்களுடைய விசுவாசத்தைக் குறித்து சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க அவர்களால் முடிகிறது.—1 பேதுரு 3:15.
நூற்றுக்கும் அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சபைக்கு மிஷனரி ஒருவர் நியமிக்கப்பட்டார். காவற்கோபுரம் பத்திரிகையைப் பயன்படுத்தி நடத்தப்படும் வாராந்தர பைபிள் படிப்பில் வெகு சிலரிடமே பத்திரிகை இருந்ததையும், அதிலும் வெகு சிலரே பதில் சொன்னதையும் அவர் கவனித்தார். இதற்கு காரணம்? எழுத்தறிவின்மை. வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளி ஆரம்பிக்கப்படுவதைப் பற்றி சபைக்கு அறிவிக்கப்பட்டபோது, ஆசிரியையாக பணியாற்ற அந்த மிஷனரி மகிழ்ச்சியோடு முன்வந்தார். முதலில் சிலரே கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினர், ஆனால் சீக்கிரத்திலேயே பலதரப்பட்ட வயதினரில் 40-க்கும் அதிகமானோர் கலந்துகொள்ள ஆரம்பித்தனர்.
இதனால் கிடைத்த பலன்கள்? அந்த மிஷனரி விவரிக்கிறார்: “இந்த எழுத்தறிவு வகுப்பை ஆரம்பித்த சில நாட்களுக்குப்பின், மிஷனரி இல்லத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வர காலை ஆறு மணிக்கு மார்க்கெட்டுக்குப் போனேன். அங்கே சில மாணவர்கள், சிறுவர்கள்கூட, தேங்காய்களையும் காய்கறிகளையும் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏன்? ஏனென்றால் வகுப்புக்குத் தேவையான பேனா, நோட்டுப் புத்தகங்களை வாங்க போதுமான பணம் சம்பாதிக்க விரும்பினார்கள்! அதோடு, அந்த வகுப்புகளுக்கு வர ஆரம்பித்ததால் தங்களுக்கென்று சொந்தமாக காவற்கோபுரம் பத்திரிகை வைத்துக்கொள்வதற்கும் தூண்டப்பட்டிருக்கிறார்கள்.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “இப்பொழுது, சபையில் காவற்கோபுர படிப்பு நடக்கும்போது சிறியவர்களும் பெரியவர்களும் பதில் சொல்கிறார்கள், எங்களுடைய படிப்பு களைகட்டுகிறது.” அந்த வகுப்பு மாணவர்களில் நான்கு பேர், தங்களுக்கு “இனிமேல் பயமில்லை” என்று சொல்லி வெளி ஊழியத்தில் தாங்கள் கலந்துகொள்ள முடியுமா என கேட்டது இந்த மிஷனரிக்கு குறிப்பாக அதிக சந்தோஷத்தைத் தந்தது.
மாணவர்கள் எழுதப் படிக்க கற்றுக்கொண்டதோடு இன்னும் அநேக பலன்களையும் பெற்றிருக்கின்றனர். உதாரணமாக, சாட்சி ஒருவருடைய மனைவி—இவர் விசுவாசத்தில் இல்லாதவர்—சபைக்கு பெரும் தொந்தரவு கொடுத்து வந்தாள். லேசாக எரிச்சல் ஏற்பட்டதுமே ஆட்கள் மீது கற்களை எடுத்து வீசினாள், மற்ற பெண்களை விறகு கட்டையால்கூட விளாசினாள். தன்னுடைய கணவனுடன் சேர்ந்து எப்பொழுதாவது கூட்டங்களுக்கு வருவாள்; அவர் மீது அதிக பொறாமை பிடித்தவளாக இருந்தாள்; ஆகவே, மற்ற பெண்களை பார்த்துவிட்டதாக அவள் குற்றஞ்சாட்டாதிருக்க அவர் கறுப்பு கண்ணாடி போட ஆரம்பித்தார்.
ஆனால் எழுத்தறிவு வகுப்புகள் ஆரம்பித்த சில காலத்திற்குப்பின், “நானும் இந்த வகுப்புக்கு வரலாமா?” என இந்தப் பெண் கேட்டாள். தாராளமாக வரலாம் என பதிலளிக்கப்பட்டது. அதுமுதல் அவள் ஒரு வகுப்புக்கும் சபை கூட்டத்திற்கும் தவறியதே இல்லை. வாசிப்பதற்குரிய பாடங்களை கஷ்டப்பட்டு படித்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் முன்னேறினாள், இது அவளை அதிக மகிழ்ச்சியடைய வைத்தது. அடுத்ததாக, “எனக்கு பைபிள் படிப்பு நடத்துவார்களா?” என கேட்டாள். அவளுடைய கணவன் சந்தோஷத்தோடு அவளுக்குப் படிப்பு நடத்த ஆரம்பித்தார், இதனால் வாசிப்பதிலும் எழுதுவதிலும் பைபிளை அறிந்துகொள்வதிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறாள்.
வாழ்க்கையில் பென்சிலையே கையில் தொட்டுப் பார்த்திராத ஐம்பது வயதுக்காரருக்கு ஒரு பென்சிலையோ பேனாவையோ பிடித்து எழுத்துக்களை எழுதுவதென்றால் மலைபோல தோன்றலாம். கற்றுக்கொள்ளும் ஆரம்ப காலங்களில், பென்சிலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பேப்பரில் அழுத்தி அழுத்தி எழுதுவதால் சிலருடைய விரல்களில் கொப்புளங்களே வந்துவிடுகின்றன. பென்சிலை பிடிப்பதற்கும் அதை லாவகமாக பயன்படுத்துவதற்கும் சில வாரங்கள் போராடிய பிறகு, “இப்பொழுது பேப்பரில் கொஞ்சம் கொஞ்சமாக கையை நகர்த்தி எழுத முடிகிறது!” என்று மாணவர்கள் சிலர் பூரிப்போடு சொல்கிறார்கள். மாணவர்களுடைய முன்னேற்றத்தைக் காண்பது சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் சந்தோஷத்தை தருகிறது. ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு அலாதி விருப்பம், யெகோவா செய்திருக்கும் இந்த ஏற்பாட்டிற்கு மாணவர்கள் தங்களுடைய இருதயப்பூர்வமான போற்றுதலை வகுப்பின் முடிவில் கைதட்டி தெரிவிக்கிறார்கள்.”
மிஷனரிகளோடுகூட, இப்பொழுது எழுதப் படிக்க கற்றுக்கொண்ட சாட்சிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் எழுதவும் வாசிக்கவும் பெற்ற திறமையை யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கு இப்பொழுது அவர்களால் பயன்படுத்த முடியுமே.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
சிறியோரும் பெரியோரும் எழுத்தறிவு வகுப்புகளுக்கு போற்றுதல் தெரிவிக்கிறார்கள்