ஏமாந்துவிடாதீர்கள்
ஏமாற்றுதல் என்பது கிட்டத்தட்ட மனிதன் தோன்றிய காலந்தொட்டே இருந்து வருகிறது. சரித்திரத்தில் பதிவாகியுள்ள முதல் சம்பவங்களில் ஒன்று ஏமாற்றுதலுடன் சம்பந்தப்பட்டது. அது ஏதேன் தோட்டத்தில் ஏவாளை சாத்தான் ஏமாற்றிய சம்பவம்.—ஆதியாகமம் 3:13; 1 தீமோத்தேயு 2:14.
அன்று முதல் இந்தப் பூமியில் ஏமாற்றுதல் இருந்து வருகிறபோதிலும், முக்கியமாக இன்று அதிக பரவலாக காணப்படுகிறது. நவீன காலத்தைக் குறித்து பைபிள் இவ்வாறு எச்சரித்தது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.”—2 தீமோத்தேயு 3:13.
பல்வேறு காரணங்களின் நிமித்தம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மோசடிக்காரர்களும் பொய் வாக்குறுதிகள் அளிப்பவர்களும், பணத்தை அபகரிக்க மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள். சில அரசியல்வாதிகள் எப்படியாகிலும் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தோடு வாக்காளர் பெருமக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். கசப்பான உண்மைகளை எதிர்ப்பட மனமில்லாமல், புகைபிடித்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகம், பாலியல் ஒழுக்கக்கேடு போன்ற உயிருக்கு உலைவைக்கும் பழக்கங்களைத் தொடருவதில் எந்தத் தீங்குமில்லை என தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையூட்டிக் கொள்கிறார்கள்.
அடுத்ததாக, மத சம்பந்தமான காரியங்களில் ஏமாற்றுதல். இயேசுவின் காலத்திலிருந்த மதத் தலைவர்கள் மக்களை ஏமாற்றினார்கள். அந்த மோசடிக்காரர்களைப் பற்றி இயேசு இவ்வாறு கூறினார்: “அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே.” (மத்தேயு 15:14) மேலும், மத விஷயங்களில் மக்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12 இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.”
இயேசுவின் காலத்தைப் போலவே, இன்றும் அநேகர் மத விஷயங்களில் ஏமாற்றப்படுகிறார்கள், இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் [சாத்தான்] அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” என அப்போஸ்தலன் பவுல் கூறினார்.—2 கொரிந்தியர் 4:4.
ஒரு மோசடிக்காரனால் ஏமாற்றப்பட்டால், நாம் பணத்தை இழந்துவிடுவோம். ஓர் அரசியல்வாதி நம்மை ஏமாற்றினால், நம்முடைய சுதந்திரம் கொஞ்சம் பறிபோகலாம். ஆனால் சாத்தான் நம்மை ஏமாற்றினாலோ, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை ஒதுக்கித் தள்ள நேரிட்டு நித்திய ஜீவனையே இழந்துவிடுவோம்! ஆகவே ஏமாந்துவிடாதீர்கள். எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமளிக்காத மத சத்தியத்தின் ஊற்றுமூலமாய் விளங்கும் பைபிளுக்கு உங்களுடைய மனதையும் இதயத்தையும் திறவுங்கள். இல்லையேல் பெரும் பயனை இழந்துவிடும் அபாயத்தில் இருப்பீர்கள்.—யோவான் 17:3.