விலையை கணக்கிடுகிறீர்களா?
இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனைப் பற்றிய நம்பிக்கையை தம் சீஷர்களுக்கு அளித்தார்; அதே சமயத்தில் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது எதையெல்லாம் உட்படுத்துகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்படியும் அவர் அறிவுறுத்தினார். பின்வருமாறு கேட்டு அந்தக் குறிப்பை விளக்கினார்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்[தால்], . . . அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் [அல்லது, செலுத்த வேண்டிய விலையைக் கணக்கிட்டுப்] பாராமலிருப்பானோ?” (லூக்கா 14:28, 30) விலை என்று எதை இயேசு அர்த்தப்படுத்தினார்?
எல்லா கிறிஸ்தவர்களுக்குமே சோதனைகள் நேரிடுகின்றன; அவற்றில் சில கஷ்டமானவை. (சங்கீதம் 34:19; மத்தேயு 10:36) ஆகவே, எதிர்ப்பு அல்லது மற்ற பிரச்சினைகள் நமக்கு வருகையில் இடிந்துபோய் உட்கார்ந்து விடாதபடி ஆவிக்குரிய விதத்திலும் மனதளவிலும் நாம் தயாராக இருப்பது அவசியம். கிறிஸ்துவின் சீஷனாக மாறுகையில் இப்படிப்பட்ட சவால்களையெல்லாம் நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஏற்கெனவே கணக்கிட்டுப் பார்த்திருக்க வேண்டும்; அதனால் கிடைக்கும் பலனோ, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிப்பு; இது, இந்த தற்போதைய உலகம் நமக்கு தரத்தக்க எவற்றையும்விட மதிப்பு வாய்ந்தது என்பதை அறிந்தவர்களாய் அவ்வாறு எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். நாம் தொடர்ந்து கடவுளுக்கு சேவை செய்தால் அவர் அனுமதிக்கும் எதுவும், ஏன் மரணமும்கூட நமக்கு நிரந்தர தீங்கை விளைவிக்காது என்பது உறுதி.—2 கொரிந்தியர் 4:16-18; பிலிப்பியர் 3:8, 11.
நம் விசுவாசம் அந்தளவுக்கு எப்படி பலப்படும்? ஒவ்வொரு தடவையும் நாம் சரியான தீர்மானத்தை செய்கையிலும், கிறிஸ்தவ நியமங்களுக்காக உறுதியாக நிலைநிற்கை எடுக்கையிலும், கடவுளுடைய சித்தத்திற்கு இசைய ஒரு செயலை செய்கையிலும், நம் விசுவாசம் பலப்படுகிறது; முக்கியமாக அழுத்தத்தின்கீழும் இவ்வாறு செய்யும்போது நம் விசுவாசம் பலப்படுகிறது. விசுவாசத்துடன் வாழ்வதனால் கிடைக்கும் பலனாகிய யெகோவாவின் ஆசீர்வாதத்தை தனிப்பட்ட விதத்தில் நாம் அனுபவிக்கையில் நம் விசுவாசம் இன்னும் பலப்படுகிறது, பெருகுகிறது. இவ்வாறு நாம் இயேசுவின் உதாரணத்தையும் அவருடைய ஆரம்ப சீஷர்களின் உதாரணத்தையும் பின்பற்றுகிறோம்; அத்துடன், கடவுளுக்கு சேவை செய்வதற்கு ‘செலுத்த வேண்டிய விலையை’ சரியாக ‘கணக்கிட்டு’ காலம் காலமாக அவருக்கு சேவை செய்யும் விசுவாசமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரின் உதாரணத்தையுமே பின்பற்றுகிறோம்.—மாற்கு 1:16-20; எபிரெயர் 11:4, 7, 17, 24, 25, 32-38.