‘எங்கள் அன்பு பெருகியுள்ளது’
ஜப்பானிலுள்ள ஹொக்கைடோவில் 23 வருடங்களாக உறங்கிய மவுண்ட் ஊசூ எரிமலை 2000, மார்ச் 31, வெள்ளிக்கிழமை அன்று வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் அபாய எல்லைப் பகுதியை விட்டு தப்பியோட வேண்டியதாயிற்று. அப்பகுதியில் வசித்த அநேகர் வீடிழந்தனர், வேலையிழந்தனர்; ஆனால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது சந்தோஷமான விஷயம். தப்பியோடியவர்களில் 46 பேர் யெகோவாவின் சாட்சிகள்; ஆனால் அவர்கள் ஆதரவற்ற நிலையில் விடப்படவில்லை.
எரிமலை சீறிய அன்றே, அப்பகுதியில் சேவை செய்யும் கிறிஸ்தவ பயணக் கண்காணி ஒருவரின் உதவியோடு நிவாரண பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. விரைவில், பக்கத்து சபைகளிலிருந்து நிவாரண உதவி பொருட்கள் வரத் தொடங்கின. ஜப்பான் கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில், நிவாரண குழு ஒன்று சீக்கிரமாக அமைக்கப்பட்டது; ஜப்பான் எங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து நிவாரண நிதிக்காக நன்கொடைகள் வந்து குவிந்தன. ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்கு உதவும்படி, பெரிதும் பாதிக்கப்பட்ட சபைக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் அனுப்பப்பட்டனர்; உணர்ச்சி ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் ஆதரவளிப்பதற்காக வட்டாரக் கண்காணி அடிக்கடி அந்தப் பகுதியை பார்வையிட சென்றார்.
பாதிக்கப்பட்ட இடத்திலிருந்த சாட்சிகள் அதைவிட பாதுகாப்பான ஒரு பகுதியிலுள்ள தனியார் வீடுகளில் தொடர்ந்து கிறிஸ்தவ கூட்டங்களை நடத்தி வந்தனர். ராஜ்ய மன்றம் இருந்த பகுதியிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவு நீக்கப்பட்டதும், சகோதரர்கள் திரும்பி வந்தனர்; வந்தவர்கள், விரிசல்கள் ஏற்பட்டு, சாய்ந்து நின்ற, சேதமடைந்த கட்டடத்தையே கண்டனர். ராஜ்ய மன்றத்திற்கு ஓரளவு பக்கத்திலேயே புதிதாக உருவாகியிருந்த எரிமலை வாய் அடர்த்தியான புகையை இன்னும் உமிழ்ந்து கொண்டிருந்தது. ‘இப்பகுதியில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவது உசிதமான காரியமா? ராஜ்ய மன்றத்தை பழுது பார்க்க முடியுமா?’ என்றெல்லாம் சாட்சிகள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
அருகில் இதைவிட பாதுகாப்பான இடத்தில் ஒரு புதிய ராஜ்ய மன்றம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. மண்டல கட்டட குழுவும் தேவையான உதவி அளித்தது. தேசம் முழுவதிலுமுள்ள சாட்சிகள் கொடுத்த நன்கொடை பணம் இதைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. சீக்கிரமாக நிலம் வாங்கப்பட்டது; நூற்றுக்கணக்கான வாலண்டியர்களின் உதவியால் குறைந்த காலத்திலேயே புதிய ராஜ்ய மன்றம் கட்டி முடிக்கப்பட்டது. 2000, ஜூலை 23-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, 75 பேர் இந்தப் புதிய ராஜ்ய மன்றத்தில் முதல் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அங்கு வந்திருந்த அநேகர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அதே வருடம் அக்டோபர் மாதத்தில் ராஜ்ய மன்ற பிரதிஷ்டையின்போது, உள்ளூர் சபை மூப்பர் ஒருவர் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தைகள் இவை: “இந்த எரிமலை வெடித்ததால் கஷ்டத்தையும் வேதனையையும் அனுபவித்தோம். ஆனால் இந்தக் கட்டட வேலை எங்கள் பயத்தை சந்தோஷமாக மாற்றியது. யெகோவாவிடமும் அருமையான கிறிஸ்தவ சகோதரர்களிடமும் உள்ள எங்கள் அன்பு பெருகியுள்ளது!”
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
மவுண்ட் ஊசூ வெடித்தல்: AP Photo/Koji Sasahara