இந்த உலகின் முடிவை நீங்கள் எவ்வாறு தப்பிக்கலாம்?
“உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்” என இந்த காரிய ஒழுங்குமுறையின் முடிவை பற்றி பைபிள் விவரிக்கிறது. (செப்பனியா 1:15) இப்படிப்பட்ட ஒரு நாள் வரவேண்டும் என்று பொதுவாக யார்தான் எதிர்பார்ப்பார்கள்? இருப்பினும், அப்போஸ்தலன் பேதுரு உடன் கிறிஸ்தவர்களுக்கு இந்த அறிவுரையைத்தான் கொடுத்தார்: “தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:12, 13.
சடப்பொருட்களான வானங்களும் பூமியும் அழிவதை பற்றி பேதுரு இங்கு கூறவில்லை. இந்தச் சூழமைவில் பேதுரு கூறிய ‘வானங்களும்’ “பூமியும்” இன்றிருக்கும் ஊழல் நிறைந்த மனித அரசாங்கங்களையும் தேவபக்தியற்ற மனித சமுதாயத்தையும் குறிக்கின்றன. ‘யெகோவாவின் நாள்’ இந்த பூமியை அழிப்பதற்கு மாறாக ‘தேசத்தின் பாவிகளை அதிலிருந்து அழித்துவிடும்.’ (ஏசாயா 13:9) இன்றைய பொல்லாத மனித சமுதாயத்தில் செய்யப்படும் “சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற” நபர்களுக்கோ யெகோவாவின் நாள் இரட்சிப்பின் நாளாகும்.—எசேக்கியேல் 9:4.
அப்படியென்றால், ‘யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளில்’ யாரால்தான் தப்பிக்க முடியும்? அவருடைய தீர்க்கதரிசிகளில் ஒருவருக்கு வெளிப்படுத்தப்பட்ட ‘யெகோவாவின் வசனம்’ அந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறது: ‘[யெகோவாவின்] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.’ (யோவேல் 1:1; 2:31, 32) யெகோவாவின் நாமத்தை தொழுதுகொள்வது எதை அர்த்தப்படுத்துகிறது என அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுவார்கள்.