எட்டாம் ஹென்றியும் பைபிளும்
ஆங்கிலம் பேசும் மக்களின் வரலாறு (தொகுப்பு 2) என்ற புத்தகத்தில் (ஆங்கிலம்) வின்ஸ்டன் சர்ச்சில் இவ்வாறு எழுதினார்: “சீர்திருத்த இயக்கத்தின் காரணமாக சமயத் துறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பைபிள் தலைசிறந்த ஆலோசனைக்கு உகந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதன் செல்வாக்கு எல்லா இடங்களிலும் பரவியது. கல்வியறிவு இல்லாதவர்களின் கைகளில் பரிசுத்த பைபிள் இருப்பது ஆபத்தானது, அதை பாதிரிமார் மாத்திரமே வாசிக்க வேண்டும் என்று மூத்த தலைமுறையினர் நினைத்தார்கள்.”
தொடர்ந்து பதிவு இவ்வாறு கூறுகிறது: “டின்டேல், கவர்டேல் ஆகியோரால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்கள் 1535-ன் இலையுதிர்கால இறுதியில் முதன்முறையாக முழுமையாக அச்சிடப்பட்டு வெளிவந்தன. அது முதல் பல பதிப்புகள் வந்திருக்கின்றன. பைபிள் வாசிப்பை ஊக்குவிக்க பாதிரிமாரை அரசு கேட்டுக்கொண்டது.” துளிகூட பைபிள் அறிவே இல்லாத பல நூற்றாண்டுகளுக்குப்பின், இங்கிலாந்து மக்கள் இப்போது பைபிள் கல்வியை பெற்றுக்கொள்ளவிருந்தனர், ஆனால் இதற்கு காரணம் சர்ச் அல்ல, எட்டாம் ஹென்றியின் அரசே ஆகும்.a
“பாரிஸில், இதற்கு முன்னால் அச்சிடப்பட்ட பைபிள்களைவிட விலையுயர்ந்த பைபிள்களை அதிகமதிகமாக அச்சிடும்படி அரசு உத்தரவிட்டது, பைபிள் சம்பந்தமாக முந்தைய பழக்கவழக்கங்களையும் கருத்துக்களையும் கடைப்பிடித்து வந்தவர்களுக்கு இது பேரடியாக இருந்தது. மேலும், செப்டம்பர் 1538-ல், தேசத்திலுள்ள ஒவ்வொரு சர்ச்சும் இருப்பதிலேயே மிகப் பெரிய பைபிளை ஆங்கில மொழியில் வாங்கி வைக்க வேண்டும், அந்த சர்ச்சை சேர்ந்தவர்கள் அதை எளிதில் எடுத்து வாசிப்பதற்கு வசதியான இடத்தில் வைக்க வேண்டும் என்று அது உத்தரவிட்டது. லண்டன் நகரில் செயின்ட் பால் கத்தீட்ரலில் ஆறு பைபிள்கள் வைக்கப்பட்டன. அவற்றை வாசிக்க நாள் முழுவதும் மக்கள் அங்கு திரண்டுவந்தனர். சத்தமாக வாசிக்க முடிந்தவர் யாராவது இருந்தால் கூட்டம் விசேஷமாக அலைமோதியதாக சொல்லப்படுகிறது.”
அநேக தேசங்களில் பைபிளை தவறாமல் வாசிக்க தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை அநேகர் பயன்படுத்திக் கொள்வதில்லை. இது கவலைப்பட வேண்டிய விஷயம், ஏனென்றால் பைபிள் மாத்திரமே “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
[அடிக்குறிப்பு]
a அரசர் எட்டாம் ஹென்றி 1509 முதல் 1547 வரை இங்கிலாந்தை ஆண்டுவந்தார்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
எட்டாம் ஹென்றி: Painting in the Royal Gallery at Kensington, from the book The History of Protestantism (Vol. I)