“உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்”
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலொழிய அல்லது கும்மிருட்டில் நாம் மூழ்கிப்போனாலொழிய வெளிச்சத்தின் அருமை நமக்கு தெரிவதில்லை. நம்முடைய பிரபஞ்சத்தின் “மின் உற்பத்தி நிலையமாகிய” சூரியன் முழு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பது சந்தோஷமான விஷயம். சூரியன் தரும் ஒளியால் நாம் காண்கிறோம், உண்கிறோம், சுவாசிக்கிறோம், ஜீவிக்கிறோம்.
வாழ்க்கைக்கு ஒளி மிகவும் இன்றியமையாததாக இருப்பதால், முதல் சிருஷ்டிப்பு நாளில் ஒளி உண்டானதைப் பற்றி ஆதியாகமத்தில் வாசிக்கையில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. “‘ஒளி தோன்றுக!’ என்றார்; ஒளி தோன்றிற்று.” (தொடக்க நூல் [ஆதியாகமம்] 1:3, பொ.மொ.) தாவீது ராஜா போன்ற மதிப்பிற்குரிய மனிதர்கள் யெகோவாவே உயிருக்கும் ஒளிக்கும் ஊற்றுமூலர் என்பதை எப்போதுமே புரிந்து கொண்டார்கள். “வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்” என தாவீது எழுதினார்.—திருப்பாடல்கள் [சங்கீதம்] 36:9, பொ.மொ.
தாவீதின் வார்த்தைகள் சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தமாகவும் உண்மையாக உள்ளன. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒளி இருப்பதால்தான் நம்மால் பார்க்க முடிகிறது.” அது மேலும் கூறுகிறது: “வேறெந்த புலன்களையும்விட கண்களின் வழியாகத்தான் அதிகமான தகவல்கள் மூளையை வந்தடைகின்றன.” பார்வையே கற்றுக்கொள்வதற்கு வழி. சரியாக செயல்பட அந்தப் பார்வைக்கு ஒளி தேவை. எனவேதான் பைபிளில் அந்த ஒளி அடையாள அர்த்தத்திலும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்.” (யோவான் 8:12) இயேசு பிரசங்கித்த சத்தியத்தின் செய்தியே அடையாள அர்த்தமுள்ள அந்த ஒளி. இது கேட்பவர்களின் மனங்களிலும் இருதயங்களிலும் ஒளியேற்றியது. பல வருடங்களாக ஆவிக்குரிய இருளில் இருந்த இயேசுவின் சீஷர்களால் மனிதகுலத்திற்கு கடவுள் வைத்திருக்கும் நோக்கத்தைப் பற்றியும் ராஜ்ய நம்பிக்கையைப் பற்றியும் கடைசியில் புரிந்துகொள்ள முடிந்தது. இது உண்மையிலேயே “ஜீவ ஒளி”யாக இருந்தது; ஏனென்றால் இந்த அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தவிருந்தது. இயேசு தமது பரலோக தகப்பனிடம் ஜெபிக்கையில், “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று சொன்னார். (யோவான் 17:3) இந்த ஆவிக்குரிய ஒளியை ஒருபோதும் அசட்டை செய்யாதிருப்போமாக!