அன்று நாங்கள் ஓநாய்கள்—இன்று ஆடுகள்!
சக்கீனாவும் நானும் சிறுமிகளாக இருந்தபோது, பக்கத்து வீடுகளில் வசித்தோம். சக்கீனா உருவில் பெரியவளாகவும் பலமிக்கவளாகவும் இருந்தாள், ஆனால் நானோ சிறியவளாகவும் குச்சிபோல் ஒல்லியாகவும் இருந்தேன். நாங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தகராறு பண்ணுவது வழக்கம். ஆனால், ஒருநாள் எங்களுக்குள் பெரிய சண்டையே வந்துவிட்டது. அந்த நாளிலிருந்து நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதுமில்லை, ‘ஹலோ’ சொல்வதுமில்லை. கடைசியில், யார் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் நாங்கள் இருவரும் வெவ்வேறு இடத்திற்குச் சென்றுவிட்டோம்.
1994-ல் நான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளை படிக்க ஆரம்பித்தேன், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய குணமும் மாறியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசேஷ மாநாட்டு தினத்திற்கு புருண்டியிலுள்ள புஜும்புராவுக்குச் சென்றிருந்தபோது எதேச்சையாக சக்கீனாவை பார்த்து திடுக்கிட்டேன். அவள் அங்கே வந்திருந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது, ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் தெரிவித்த வாழ்த்துதலோ உள்ளப்பூர்வமாக இருக்கவில்லை. அன்று முழுக்காட்டுதல் எடுப்பவர்களில் அவளும் ஒருத்தியாக இருந்ததைப் பார்த்ததும் என்னால் நம்பவே முடியவில்லை! அவளும் நன்கு மாறியிருந்தாள். அவள் இனிமேலும் முன்போல் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வருபவளாக இல்லை. கடவுளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாக எல்லாருக்கும் முன்பு தண்ணீர் முழுக்காட்டுதல் எடுத்ததைப் பார்த்தது எவ்வளவு ஆச்சரியமாக இருந்தது!
தண்ணீரிலிருந்து மேலே எழுந்து வந்தபோது, அவளை கட்டிப்பிடிப்பதற்காக நான் ஓடிச்சென்று, “நாம எப்படி சண்டை போடுவோம்னு உனக்கு ஞாபகமிருக்கா?” என்று அவளுடைய காதுக்குள் கிசுகிசுத்தேன். “ஆமாம், எனக்கு ஞாபகமிருக்கு, ஆனால் அது அன்று. இன்று நான் ஒரு புதிய மனுஷி” என்று சொன்னாள்.
பைபிள் சத்தியத்தைக் கண்டுபிடித்ததில் எங்கள் இருவருக்கும் அதிக சந்தோஷம், அது எங்களை ஒன்று சேர்த்திருக்கிறது; ஓநாய் போன்ற எங்களை பெரிய மேய்ப்பராகிய யெகோவா தேவனுடைய ஆடுகளாக மாற்றியிருக்கிறது. ஆம், பைபிள் சத்தியம் வாழ்க்கையை மாற்றுகிறது.