“கடவுள் உண்மையிலேயே மனிதர்களை எரிநரகத்தில் தள்ளுகிறாரா?”
“நீங்கள் தியாலஜி படிக்கிறீர்களா?”
இந்தக் கேள்வி எதிர்பாராத விதமாக ஜோயலிடமும் கார்லிடமும் கேட்கப்பட்டது. நியூ யார்க், புரூக்ளினில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் தன்னார்வ ஊழியர்களாக பணிபுரியும் இந்த இரண்டு இளைஞர்களும் பக்கத்திலுள்ள ஒரு புத்தக கடையில் சில புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தார்கள். பைபிள் ‘கன்கார்டன்ஸ்’களை ஜோயல் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஊழியத்தில் தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தைப் பற்றி அவரிடம் கார்ல் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது பக்கத்திலிருந்த மனிதருடைய காதில் விழுந்தது, அதைக் கேட்டு அந்த மனிதர் அவர்களிடம் வந்தார்.
இவர்கள் தியாலஜி படிக்கிறார்களா என்பதைவிட தன்னுடைய மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு பதிலை அறிந்துகொள்வதில் அந்த மனிதர் ஆர்வமாக இருந்தார். அவர் இவ்வாறு கூறினார்: “நான் ஒரு யூதன், யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால் நான் எரிநரகத்தில்தான் தள்ளப்படுவேன் என என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள் சிலர் சொன்னார்கள். அது என்னுடைய மனதை ரொம்ப நெருடிக் கொண்டிருக்கிறது. அன்பான ஒரு கடவுளிடமிருந்து இப்பேர்ப்பட்ட ஒரு தண்டனை வருவது நியாயமாக படவில்லை. கடவுள் உண்மையிலேயே மனிதர்களை எரிநரகத்தில் தள்ளுகிறாரா?”
பைபிள் மீது தங்களுக்கு மிகுந்த ஆர்வமிருப்பதை நல்மனம் படைத்த அந்த மனிதரிடம் ஜோயலும் கார்லும் சொன்னார்கள். இறந்தவர்கள் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும், வெறுமனே மரண நித்திரையில் உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பைபிளிலிருந்து அவருக்கு எடுத்துக் காண்பித்தார்கள். ஆகவே, மரித்தவர்களுக்கு சித்திரவதையும் இல்லை, எரிநரக வேதனையுமில்லை. (சங்கீதம் 146:3, 4; பிரசங்கி 9:5, 10; தானியேல் 12:13; யோவான் 11:11-14, 23-26) 45-நிமிட உரையாடலின் முடிவில், அந்த மனிதர் தன்னுடைய விலாசத்தை ஜோயலுக்கும் கார்லுக்கும் கொடுத்து, இந்த விஷயத்தில் கூடுதலான தகவல் தரும்படி கேட்டுக்கொண்டார்.
நரகம் என்பது நெருப்பு கொழுந்துவிட்டெரிகிற இடமாக இருந்தால், யாராவது அங்கே போக விரும்புவார்களா? ஆனால் தன்னுடைய கஷ்டத்திலிருந்து விடுபட விரும்பி, முற்பிதாவாகிய யோபு அங்கேதான் போக ஆசைப்பட்டார்: “நரகத்தில் என்னை பாதுகாத்து, உம்முடைய கோபம் தணியும் வரை ஒளிந்திருப்பதற்கு யார் எனக்கு அனுமதியளிப்பார்?” (யோபு 14:13, டூவே வர்ஷன்) நரகம் என்பது வதைக்கப்படும் இடம் என யோபு நம்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மாறாக, அங்கே பாதுகாப்பை கண்டடைய விரும்பினார். மரணம் என்பது இல்லாமை என்ற ஓர் நிலை, பைபிளில் நரகம் என்பது மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழி.
நாம் இறக்கும்போது நமக்கு என்ன சம்பவிக்கிறது என்பதையும் அதற்குப் பிறகு நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்பதையும் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், பின்வரும் விலாசத்திற்கு எழுதும்படி உங்களை அன்போடு அழைக்கிறோம்.