இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா?
“மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என முற்பிதாவாகிய யோபு சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கேட்டார். (யோபு 14:14) இக்கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தை குழப்பமடையச் செய்துள்ளது. காலங்காலமாக, இவ்விஷயத்தைப் பற்றி எல்லா கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களும் சிந்தித்துள்ளனர்; இதனால் வெவ்வேறு கொள்கைகளும் உருவாகியுள்ளன.
பெயரளவில் கிறிஸ்தவர்களாய் இருப்பவர்கள், பரலோகமும் நரகமும் இருப்பதாக நம்புகின்றனர். இந்துக்களோ மறுபிறவி கோட்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லீம்களைப் பொறுத்தவரை, இஸ்லாமிய மத நிறுவனத்தில் துணை ஆசிரியராக பணிபுரியும் ஏமிர் முயாவீயா கூறுவதாவது: “இறப்புக்குப் பின் நியாயத்தீர்ப்பு நாள் இருப்பதை நாங்கள் நம்புகிறோம். ஆண்டவராகிய அல்லாவுக்கு முன் நீங்கள் போய் நிற்கையில், நீதிமன்றத்திற்குள் செல்வது போலவே இருக்கும்.” ஆகவே இஸ்லாமிய நம்பிக்கையின்படி, அவரவர் வாழ்ந்த வாழ்க்கையை அல்லா மதிப்பிட்டு, சுவனத்திற்கோ எரிநரகத்திற்கோ செல்லும்படி தீர்ப்பளிப்பார்.
இலங்கையில், புத்த மதத்தினரும் கத்தோலிக்கரும் தங்கள் வீட்டில் யாராவது இறந்துவிட்டால், கதவுகளையும் ஜன்னல்களையும் நன்றாக திறந்து வைப்பர். எண்ணெயில் எரியும் ஒரு விளக்கை ஏற்றி வைப்பர், இறந்தவரின் கால்கள் முன்பக்க வாசலைப் பார்த்தவாறு இருக்கும்படி சவப்பெட்டியை வைப்பர். இவ்வாறெல்லாம் செய்வது இறந்தவரின் ஆவி வெளியேற உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரானல்ட் எம். பெர்ன்ட், “அழியாத ஆன்மீக இயல்புடையவர்களே மனிதர்கள்” என ஆஸ்திரேலியாவிலுள்ள பழங்குடியினர் நம்புவதாக கூறினார். சில ஆப்பிரிக்க இனத்தவர் நம்புவதாவது: இறந்தபின் சாதாரண மக்கள் பேய்களாக மாறுகின்றனர்; முதன்மை வாய்ந்தவர்களோ சமுதாயத்தின் கண்காணா தலைவர்களாக கருதப்பட்டு கௌரவிக்கப்படும் முன்னோரின் ஆவிகளாக மாறுகின்றனர்; அவர்களிடம் பிரார்த்தனையும் செய்யப்படுகிறது.
சில நாடுகளில், இறந்தவர்களைப் பற்றிய நம்பிக்கைகளில், பெயரளவில் கிறிஸ்தவர்களாய் இருப்பவர்களின் நம்பிக்கையுடன் அந்நாட்டுப் பாரம்பரியமும் கலந்துவிடுகிறது. உதாரணமாக, மேற்கு ஆப்பிரிக்காவில் அநேக கத்தோலிக்கரும் புராட்டஸ்டண்ட்டினரும் கடைப்பிடிக்கும் பழக்கம் என்னவென்றால், யாராவது இறந்துவிட்டால் முகம் பார்க்கும் கண்ணாடிகளை மூடிவிடுவர்; ஏனெனில் கண்ணாடியின் வழியாக இறந்தவரின் ஆவியை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதே அவர்களது நம்பிக்கை.
ஆகவே, ‘நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது?’ என்ற கேள்விக்கு வெவ்வேறு விதமாக மக்கள் பதிலளிக்கின்றனர். ஆனாலும், இவை எல்லாவற்றிற்கும் பொதுவாக ஓர் அடிப்படை கருத்து உள்ளது. அதாவது, ஒருவர் இறக்கும்போது, அவருக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அழிவதில்லை; அது மரணத்திலிருந்து தப்புகிறது. அந்த “ஏதோ ஒன்று” தான் ஆவி என்பதாக சிலர் நம்புகின்றனர். உதாரணமாக, ஆவியே—ஆத்துமா அல்ல—அழியாதது என ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலுமுள்ள சில பகுதிகளிலும், பாலினீஷியா, மேலனீஷியா, மைக்ரோனீஷியா ஆகிய பசிபிக் பகுதி முழுவதிலும் வசிக்கும் அநேகர் நம்புகின்றனர். சொல்லப்போனால் சில மொழிகளில் “ஆத்துமா” என்ற வார்த்தைகூட புழக்கத்தில் இருப்பதில்லை.
அப்படியானால், ஒருவர் உயிருடனிருக்கையில் அவருக்குள் ஓர் ஆவி இருக்கிறதா? அவர் இறக்கும்போது அந்த ஆவி நிஜமாகவே அவரைவிட்டுப் பிரிந்து செல்கிறதா? அப்படி செல்லுகிறதென்றால், அதற்கு என்ன சம்பவிக்கிறது? இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? இதுபோன்ற கேள்விகளை புறக்கணித்துவிடக் கூடாது. உங்கள் மதப் பின்னணியோ கலாச்சார பின்னணியோ, எதுவாயிருந்தாலும் இறப்பு என்பது சந்திக்க வேண்டிய ஓர் யதார்த்தமே. எனவே மிக முக்கியமான இக்கேள்விகள் உங்களையும் மிக ஆழ்ந்த விதத்தில் உட்படுத்துகின்றன. இவ்விஷயத்தை தீர ஆராயும்படி உங்களை கேட்டுக் கொள்கிறோம்.