பைபிள் படிப்பு—பயனுள்ளதா?
“பாதிரியாரின்றி வாசிக்கக் கூடாது.” கத்தோலிக்கருடைய பைபிள்கள் சிலவற்றின் முன்பக்கத்தில் இந்த எச்சரிக்கை காணப்படுகிறது. “நாங்கள் கத்தோலிக்கராக இருப்பதால் பைபிளைப் பற்றி எங்களுக்கு சரியாக தெரியாது, ஆனால் இந்த நிலைமை மாறிவருகிறது” என லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள கத்தோலிக்க பைபிள் நிறுவனத்தைச் சேர்ந்த கே மர்டீ சொல்கிறார்கள். பரிசுத்த வேதவசனங்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு உதவுகின்றன என்பதை ஒருமுறை கத்தோலிக்கர்கள் ருசிபார்த்துவிட்டால், “பைபிள் மீது பசி தாகத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்” என அவர்கள் சொல்கிறார்கள்.
இந்த மாற்றத்தைக் குறித்து, மத கல்வி ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சொன்னதை யு.எஸ். கேத்தலிக் பத்திரிகை மேற்கோள் காட்டுகிறது. பைபிள் படிப்பு வகுப்புகளில் கலந்துகொண்ட கத்தோலிக்கர்கள் இவ்வாறு உணர்ந்ததாக அவர் சொன்னார்: கத்தோலிக்கர்களாகிய அவர்களுக்கு “பைபிளைப் பற்றி யாரும் சொல்லித் தரவில்லை, பைபிளிலோ ஆன்மீக செல்வம் கொட்டிக் கிடக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காமற்போன அந்த செல்வத்தில் கொஞ்சத்தையாவது பெற விரும்புகிறார்கள்.”
அதுசரி, பைபிள் மாணாக்கர் பெற்றுக்கொள்வதற்கு, பைபிளில் அப்படி என்ன “ஆன்மீக செல்வம்” இருக்கிறது? இதை கவனியுங்கள்: வாழ்க்கையின் அன்றாட கவலைகளை சமாளிப்பது எப்படி? குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்வது எப்படி? ஏன் இவ்வளவு முரட்டுத்தனமும் சமுக விரோத நடத்தையும் காணப்படுகிறது? இன்றைய இளைஞர் மத்தியில் வன்முறை தலைவிரித்தாடுவதற்கு காரணம் என்ன? இதையெல்லாம் நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இவற்றிற்கும் சிக்கலான வேறுபல கேள்விகளுக்கும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் நம்பகமான பதில்களை காணலாம். சொல்லப்போனால், அவை கத்தோலிக்கருக்கோ புராட்டஸ்டன்டினருக்கோ மாத்திரமல்ல, புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஷின்டோ மதத்தினருக்கும், நாத்திகருக்கும் அறியொணாமை கொள்கையினருக்கும்கூட “ஆன்மீக செல்வம்.” ‘கடவுளுடைய வசனம் தன் கால்களுக்குத் தீபமும், தன் பாதைக்கு வெளிச்சமுமாயிருந்தது’ என சங்கீதக்காரன் சொன்னார். இதுவே உங்களுடைய விஷயத்திலும் உண்மையாக இருக்கலாம்.—சங்கீதம் 119:105.