உலக சமாதானத்தை மதம் கொண்டுவருமா?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 31 வரை, 73 நாடுகளிலிருந்து வருகை புரிந்த 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நியூ யார்க் நகரத்தில் ஒன்றுகூடினார்கள். “மதம் மற்றும் ஆன்மீக தலைவர்களின் மிலனியம் சமாதான ஆண்டு உச்சிமாநாட்டில்” கலந்துகொள்ள ஐக்கிய நாட்டு சபையில் கூடினார்கள். தலைப்பாகை, காவிநிற உடை, இறகுகள் செருகிய கிரீடம், அல்லது நீண்ட கருப்பு அங்கியோடு வந்திருந்த அந்தத் தலைவர்கள் பல்வேறு மதங்களை பிரதிநிதித்துவம் செய்தனர். பஹாய், புத்த மதம், இந்து மதம், இஸ்லாம், ஜைன மதம், யூத மதம், ஷின்டோ, சீக்கிய மதம், தாவோ மதம், சொராஸ்டிரிய மதம், கிறிஸ்தவமண்டல மதங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அங்கு வந்திருந்தனர்.
நான்கு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் முதல் இரண்டு நாட்களுக்கு ஐக்கிய நாட்டு சபையில் அந்தப் பிரதிநிதிகள் ஒன்றுகூடினார்கள். ஆனால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ததோ அல்லது இதற்கு நிதியுதவி அளித்ததோ ஐக்கிய நாடுகள் அல்ல, மாறாக பல்வேறு நிறுவனங்களே. என்றபோதிலும், ஐநா அங்கத்தினர்களும் மதத் தலைவர்களும் வறுமை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், போர், பூண்டோடு அழிக்கும் போர் கருவிகள் ஆகியவற்றிற்கு முடிவு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார்கள்.
“உலக சமாதானத்திற்கு உறுதிமொழி” என தலைப்பிடப்பட்ட ஆவணத்தில் அந்தப் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனர். வன்முறையும் போரும் “சிலசமயங்களில் மதத்தின் பெயரில் செய்யப்பட்டதை” ஒப்புக்கொண்டபோதிலும், கையொப்பமிட்டவர்கள் “சமாதானத்திற்காக . . . ஐக்கிய நாடுகளோடு சேர்ந்து ஒத்துழைப்பார்கள்” என அந்த ஆவணம் அறிவித்தது. ஆனால், இது எப்படி செய்யப்படும் என்பதை குறிப்பிடும் திட்டவட்டமான எந்தவொரு தீர்மானங்களும் அதில் இல்லை.
இரண்டாம் நாள் மாநாட்டில், சில வருடங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் தான் கவனித்த ஒரு படத்தைப் பற்றி விளக்கி இந்த உச்சிமாநாட்டின் பொதுச் செயலாளர் பாவா ஜெயின் தன்னுடைய முன்னுரையை முடித்தார். அந்தப் படம் ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலக கட்டிடத்தைவிட உயரமான ஓர் ஆளை சித்தரித்துக் காட்டியது. அந்தக் கட்டிடத்தையே கதவுபோல நினைத்து அந்த ஆள் அதை தட்டிக்கொண்டிருந்தார். அந்தப் படத்திற்கு கீழே “சமாதான பிரபு” என எழுதப்பட்டிருந்தது. திரு. ஜெயின் இவ்வாறு சொன்னார்: “[அந்தப் படத்தைப்] பார்த்த மாத்திரத்திலேயே அது என்னுடைய மனதை மிகவும் தொட்டுவிட்டது. [அதன்] அர்த்தம் என்னவென்று நான் பலரிடம் கேட்டேன். அதற்கு இன்று எனக்கு பதில் கிடைத்துவிட்டது. ஆன்மீக மற்றும் மதத் தலைவர்களாகிய நீங்கள் அனைவரும் இங்கு கூடியிருப்பது, ஐக்கிய நாடுகளின் கதவை தட்டுகிற சமாதான பிரபுவாகவே எனக்கு தோன்றுகிறது.”
பைபிளோ மாறுபட்ட கருத்தை தருகிறது. இயேசு கிறிஸ்துவே சமாதான பிரபு என அது சுட்டிக்காட்டுகிறது. உலக அரசியல் அல்லது மதத் தலைவர்களுடைய முயற்சியால் அல்ல, ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாகவே அவர் உலகளவில் சமாதானத்தை கொண்டுவருவார். இந்த ராஜ்யமே—கடவுளுடைய பரலோக ராஜ்யமே—கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தை வெற்றிகரமாக ஒன்றுபடுத்தி பூமியில் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற ராஜ்யம்.—ஏசாயா 9:6; மத்தேயு 6:9, 10.