நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?
ஜார்ஜ்—எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்கும் இனிய சுபாவமுடையவர். அவரை பொருத்தவரை, வாழ்க்கை என்பது ஆனந்தமாக அனுபவிக்க வேண்டிய ஓர் அருமையான பரிசு. மகிழ்ச்சி, நம்பிக்கையான மனநிலை—இதெல்லாம் அவருக்கே உரிய தனிப்பண்புகள். கைகள் தளர்ந்து, கால்கள் தள்ளாடி, கண்கள் ஒளியிழந்து தவிக்கும் தாளாத வயதிலும் மகிழ்ச்சியாகவே இருந்தார். ஆழ்ந்த நித்திரையில் அயரும் நாள் வரை, மகிழ்ச்சியான மனிதர் என்றே அறியப்பட்டார். ஜார்ஜை போலவே நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஒவ்வொரு விடியலையும் பரிசாக நினைத்து அந்நாளை ஆனந்தமாக அனுபவிக்கிறீர்களா? அல்லது ஏன்தான் விடிந்ததோ என சலிப்படைகிறீர்களா அல்லது இன்றைக்கு என்ன நடக்கப்போகிறதோ என்று பயப்படுகிறீர்களா? உங்களுடைய மகிழ்ச்சியை ஏதேனும் சூறையாடுகிறதா?
மகிழ்ச்சி என்பது ஓரளவுக்கு நிலையாக இருக்கும் நலமார்ந்த நிலை என விளக்கமளிக்கப்படுகிறது. இது, திருப்தியான மனநிலையில் ஆரம்பித்து சந்தோஷத்தின் உச்சநிலைக்குச் செல்லும் உணர்ச்சிகளையும், தொடர்ந்து நலமாக வாழ வேண்டும் என்ற இயல்பான ஆசையையும் அடிப்படையாக கொண்டதாகும். இப்படிப்பட்ட மகிழ்ச்சி உண்மையில் இருக்கிறதா?
காசு பணம் இருந்தால் காலமெல்லாம் மகிழ்ச்சி மஞ்சத்தில் லயித்திருக்கலாம் என்பதே பொதுவாக மக்களின் கருத்து. குபேரனாக வேண்டும் என்ற வெறியில் கோடிக்கணக்கானோர் காலம் நேரம் பார்க்காமல் கண்மூடித்தனமாக உழைக்கிறார்கள். இதனால் அநேகர் தங்களுடைய மனைவி மக்களையும் கண்டுகொள்வதில்லை, வாழ்க்கையில் முக்கியமான மற்ற காரியங்களையும் கவனிப்பதில்லை. எறும்புகளைப் போல அவர்களுடைய வாழ்க்கை எப்பொழுதும் ஓட்டம் சாட்டமாகத்தான் இருக்கிறது. தங்களைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை. “மன உளைச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக” லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை கூறுகிறது. “இப்போதெல்லாம் முன்பைக் காட்டிலும் இளவயதிலேயே மக்களை [மன உளைச்சல்] பாதித்து வருகிறது . . . மன உளைச்சலை கட்டுப்படுத்தும் மருந்துகளே அமோகமாக விற்பனையாகின்றன” என அதே செய்தித்தாள் மேலும் சொல்கிறது. கோடிக்கணக்கான ஜனங்கள் சட்ட விரோதமான போதை மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள் அல்லது பிரச்சினைகளிலிருந்து விடுபட புட்டியும் கையுமாக திரிகிறார்கள். சிலரோ மன உளைச்சல் ஏற்படும்போது இஷ்டத்திற்கு செலவு செய்கிறார்கள். “மன உளைச்சலுக்குப் பரிகாரமாக ஷாப்பிங் செல்பவர்களில் அதிகமானோர் பெண்களே” என த கார்டியன் என்ற பிரிட்டிஷ் செய்தித்தாள் கூறுகிறது. “மன உளைச்சலால் பாதிக்கப்படுகையில், ஆண்களைவிட பெண்களே மூன்று மடங்கு அதிகமாக ஷாப்பிங் போகின்றனர்.”
இருந்தாலும், உண்மையான மகிழ்ச்சியை கடையிலோ புட்டியிலோ மருந்து மாத்திரையிலோ ஊசியிலோ அல்லது வங்கியிலோ கண்டடைய முடியாது. மகிழ்ச்சி என்பது விலைகொடுத்து வாங்கும் ஒன்றல்ல, இலவசமாக கிடைக்கும் ஒன்று. இந்த மதிப்புள்ள பரிசை நாம் எங்கே கண்டடையலாம்? அடுத்த கட்டுரையில் இதை ஆராயலாம்.