“அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் சாதனை”
டுவாலு—தென் பசிபிக்கில் நவ தீவுகளைக் கொண்ட ஓர் அழகிய நாடு. இதன் ஜனத்தொகை சுமார் 10,500. என்றபோதிலும், “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்” என்பதை உணர்ந்து, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சொந்த மொழியிலேயே பைபிள் பிரசுரங்களை அச்சிட ஆசைப்பட்டார்கள். (1 தீமோத்தேயு 2:4) இது ஓர் இமாலய சவால், ஏனென்றால் அந்த மொழியில் எந்தவொரு அகராதியும் கிடையாது. 1979-ல், டுவாலுவில் சேவை செய்துவந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரி ஒருவர் இந்த சவாலை சந்திக்கத் தயாரானார். இவரும் இவருடைய மனைவியும் அந்த ஊரிலுள்ள ஒரு குடும்பத்தோடு வாழ்ந்து, அந்த மொழியை கற்றுக்கொண்டார்கள். பின்பு படிப்படியாக டுவாலுவன் வார்த்தைகள் அடங்கிய சொற்களஞ்சியத்தை உருவாக்கினார்கள். 1984-க்குள், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் டுவாலுவன் மொழியில் உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
டுவாலுவின் முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் டி. பாப்புவா என்றும் வாழலாம் புத்தகத்திற்கு பாராட்டு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதியதாவது: “டுவாலுவின் முக்கியத்துவம் வாய்ந்த ‘பொக்கிஷங்களோடு’ இந்தப் புத்தகமும் இன்றியமையாத புதிய பொக்கிஷம். உங்களுடைய சேவையை—இந்நாட்டிலுள்ள மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு நீங்கள் செய்த மிகச் சிறந்த சேவையை—குறித்து அதிக சந்தோஷப்பட வேண்டும். கல்வி புகட்டும் புத்தகங்கள் அச்சிடப்பட்டதைப் பற்றிய டுவாலுவின் சரித்திரத்தில் இதுவும் பதிவாகும் என்பது என்னுடைய நம்பிக்கை. . . . இந்த [சாதனை] அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் சாதனை.”
இந்த மொழிபெயர்ப்பாளர் திரட்டிய சொற்பட்டியலே 1993-ல் டுவாலுவன்-ஆங்கிலம் அகராதி பிரசுரிப்பதற்கு அடிகோலியது. பொது மக்களுக்காக வெளியிடப்பட்ட முதல் அகராதி அதுவே. இந்த முதல் அகராதியை வைத்தே டுவாலுவன்-டுவாலுவன் அகராதியை உருவாக்குவதற்கு டுவாலுவிலுள்ள தேசிய மொழி வாரியம் சமீபத்தில் அனுமதி கேட்டது.
ஜனவரி 1, 1989 முதல், காவற்கோபுரம் பத்திரிகை டுவாலுவன் மொழியில் மாதாந்திர பத்திரிகையாக வெளிவருகிறது. நீங்கள் உங்களுடைய இரண்டாவது மொழியில் இந்தப் பத்திரிகையை வாசித்து வந்தால், காவற்கோபுரம் பத்திரிகை உங்களுடைய மொழியிலேயே வெளிவருகிறதா என்பதை தெரிந்துகொள்வதற்கு 2-ம் பக்கத்தைப் பார்த்தாலென்ன? உங்களுடைய தாய்மொழியில் வாசிப்பது உண்மையிலேயே உங்கள் மகிழ்ச்சியைக் கூட்டும்.