அகத்தின் அழகே அழியா அழகு
“அழகிருந்தால் குணமிருக்கும் என்பதே ஓர் இளைஞனின் நினைப்பு” என கடவுளை உண்மையோடு சேவிக்கும் வயதான கிறிஸ்தவர் ஒருவர் சொன்னார்.
ஆம், வெளிப்புற அழகை ஆராதிக்கும் இயல்பு மனிதனுக்கு தொன்றுதொட்டே இருக்கிறது. இது பெரும்பாலும் அக அழகின் மதிப்பை தவறாக எடை போடுவதற்கே வழிநடத்தியிருக்கிறது. ஆனால் வெளித் தோற்றம் எப்படியிருந்தாலும்சரி, படைப்பாளர் நம்முடைய இதயத்தையே பார்க்கிறார். இந்த விதத்தில் முதிர்ச்சியோடு நியாயந்தீர்ப்பதில் அவர் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என கடவுளே சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது.—1 சாமுவேல் 16:7.
கடவுளே மனிதனுடைய உண்மையான அழகுக்கு காரணர். ஒருவருடைய உண்மையான மதிப்பை எடைபோடுகையில், ஆன்மீக குணங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என அவருடைய வார்த்தை வெளிப்படுத்துகிறது. அது சொல்கிறது: “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” (நீதிமொழிகள் 31:30) வெளிப்புற கவர்ச்சி உட்புற அசிங்கத்தை மறைக்கலாம். (எஸ்தர் 1:10-12; நீதிமொழிகள் 11:22) புற அழகு காலத்தால் பொலிவிழந்து போனாலும், அக அழகு—அதாவது, இதயத்திலுள்ள பண்புகள்—வளர்ந்து, என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.
எனவே, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற குணங்களை வளர்த்துக்கொள்வது எவ்வளவு ஞானமானது! (கலாத்தியர் 5:22, 23) இவ்வாறு, அழியா மதிப்புடைய அக அழகை அடைவோம்.—1 பேதுரு 3:3, 4.