“ஐக்கியத்திற்கு எடுத்துக்காட்டு”
பிரேஸில், சாவோ பாலோவிலுள்ள என்டையாடியூப் என்ற நகரில் வெளியாகும் தினசரி ஒன்றில் வெளிவந்த தலையங்கத்தின் தலைப்பே இது. இந்த எடுத்துக்காட்டுக்கு இலக்கணமாக திகழ்பவர்கள் யார்? “யெகோவாவின் சாட்சிகளே. புதிய ‘ராஜ்ய மன்றம்’—அவர்களுடைய கோயில்களை அல்லது அரங்கங்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்—கட்டுவதற்கு திட்டமிடும் இவர்கள் ஒத்துழைப்பிற்கு கண்கூடான எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்” என அந்த எழுத்தாளர் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் ஐக்கியம் பளிச்சிடுகிறது. அதனால், அந்தக் கட்டுரை இவ்வாறு சுட்டிக் காட்டியது: “கடவுளை வழிபடுவதற்குரிய மன்றத்தை தொண்டர்களாகிய ஆண்களும் பெண்களும் வாலிபர்களும் ஒன்றுகூடி மனப்பூர்வமாக கட்டுவதை காண்பது கண்கொள்ளா காட்சி.”
மற்ற அம்சங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள். “படிப்பது, ஜெபம் செய்வதோடுகூட, குடிகாரர்களுக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கும் மறுவாழ்வு கொடுத்து, ஐக்கியம் மற்றும் அன்பின் வழியை காட்டுவதே அவர்களுடைய லட்சியம்” என அந்தத் தலையங்க கட்டுரை குறிப்பிட்டது. இதை அவர்கள் எப்படி சாதிக்கிறார்கள்? பைபிள் அறிவுரைகளை கற்று அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது கெட்ட பழக்கங்களிலிருந்து விடுதலை பெற ஒருவருக்கு உதவி செய்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் பைபிளிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கு அவர்கள் கடினமாக முயற்சி எடுக்கிறார்கள். அவர்களுடைய “எடுத்துக்காட்டு காலம் தாழ்த்தாமல் பின்பற்ற வேண்டிய எடுத்துக்காட்டு என்பதில் சந்தேகமில்லை” என அந்தக் கட்டுரை முடிக்கிறது.
யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் அனைவரும் கலந்துகொள்ளலாம், காணிக்கை வசூலிக்கப்படாது. உங்களுடைய வீட்டிற்கு அருகிலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு விஜயம் செய்யும்படி உங்களை அன்போடு வரவேற்கிறோம்.