வன்முறையை யார் ஒழித்துக்கட்டுவார்?
செப்டம்பர் 1999-ல், பொதுப் பேரவையின் 54-வது வருடாந்தர நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பிரதிநிதிகளை ஐநா-வின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் வரவேற்று பேசினார். உலக தலைவர்களுக்கு முன் அவர் வைத்த ஒரு சவாலை தி டோரான்டோ ஸ்டார் இவ்வாறு அறிக்கை செய்தது: “சர்வதேச சமுதாயத்தினர் காட்டும் இரக்கம் வெறும் வார்த்தைகளில் அல்ல, செயல்களில் இருக்க வேண்டும் என்று எண்ணற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர். வன்முறை எனும் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, செழுமை எனும் பாதுகாப்பான பாதைக்கு வழிநடத்தும் நம்பகமான, நிலையான ஒப்பந்தம் அவர்களுக்குத் தேவை.”
வன்முறையை ஒழிப்பதற்கு தேவைப்படும் “நம்பகமான, நிலையான ஒப்பந்த”த்தை ஐநா-வும் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளும் வழங்க முடியுமா? அதே ஸ்டார் அறிக்கை, அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் சொன்னதை மேற்கோள் காட்டியது: “இந்த நூற்றாண்டில் இவ்வளவு இரத்தம் சிந்திய பிறகு, ‘இனி ஒருபோதும் அப்படி நடக்காது’ என்று சொல்வது மிகவும் எளிது, ஆனால் சொன்னபடி செய்வதுதான் அதிக கஷ்டம்.” அவர் மேலும் கூறினார்: “ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, எந்த விதத்திலும் அக்கறை காட்டாத கொடூரத்திற்கு சமம்.”
மனிதனுடைய முயற்சிகளைப் பற்றி 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னார்: “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) அப்படியானால், வன்முறைக்கு முடிவு வரும் என்பதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?
ஏசாயா 60:18-ல் கடவுள் இவ்வாறு உறுதியளிக்கிறார்: “இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது.” இத்தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம், நாடுகடத்தப்பட்ட தம்முடைய ஜனங்களை கடவுள் மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வந்த சமயத்தில் நிறைவேறியது. இது மிகப் பெரிய அளவிலும் நிறைவேறப் போகிறது, அதை நாம் மகிழ்ந்து அனுபவிப்போம். யெகோவா “ஏராளமான வாக்குறுதிகளை” ஏனோதானோ என்று அளிப்பவரல்ல. உன்னதமானவராகவும் மனிதவர்க்கத்தின் படைப்பாளராகவும் இருப்பதால், அவரால் மாத்திரமே “வன்முறை எனும் சுழற்சிக்கு” முற்றுப்புள்ளி வைக்க முடியும். கடவுளுடைய ராஜ்யத்தில், சமாதானமே எங்கும் தழைத்தோங்கும். வன்முறை முழுமூச்சுடன் வழியனுப்பி வைக்கப்படும்—மீண்டும் ஒருபோதும் திரும்பிவராது!—தானியேல் 2:44.