‘உம்முடைய பலிபீடத்தைச் சுற்றிவருவேன், யெகோவாவே’
‘நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பலிபீடத்தைச் சுற்றிவருவேன், யெகோவாவே.’ (சங்கீதம் 26:7) யெகோவாவின்மீது தனக்கிருந்த பக்தியை இந்த வார்த்தைகளில் பூர்வகால ராஜாவாகிய தாவீது தெரிவித்தார். ஆனால், ஏன் யெகோவாவின் பலிபீடத்தை ‘சுற்றிவருவார்,’ என்ன அர்த்தத்தில்?
செம்பு கவசமிடப்பட்ட பலிபீடம் இருக்கும் ஆசரிப்பு கூடாரமே தாவீதுக்கு யெகோவா தேவனுடைய வணக்கத்தின் மையமாக விளங்கியது. இது, அவருடைய ஆட்சிகாலத்தில், எருசலேமுக்கு வடக்கே கிபியோனில் இருந்தது. (1 இராஜாக்கள் 3:4) அந்தப் பலிபீடத்தின் பரப்பளவு சுமார் 2.2 சதுர மீட்டரே. இது, பிற்பாடு சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பிரகாரத்தில் வைக்கப்பட்ட மகிமை பொருந்திய பலிபீடத்தைவிட மிகவும் சிறியது.a என்றபோதிலும், இந்த ஆசரிப்புக்கூடாரத்திலும் அதன் பலிபீடத்திலும் தாவீதுக்கு அளவிலா மகிழ்ச்சி. இது இஸ்ரவேலில் தூய வணக்கத்தின் மையமாக திகழ்ந்தது.—சங்கீதம் 26:8.
தகனபலிகள், சமாதான பலிகள், பாவநிவாரண பலிகள் ஆகியவை அந்தப் பலிபீடத்தில் செலுத்தப்பட்டன, வருடாந்தர பிராயச்சித்த நாளில் ஜனத்தின் சார்பாக பலிகள் செலுத்தப்பட்டன. அந்தப் பலிபீடமும் அதன் மேல் செலுத்தப்பட்ட பலிகளும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு அர்த்தமுடையது. அந்தப் பலிபீடம் கடவுளுடைய சித்தத்தை பிரதிநிதித்துவம் செய்ததாக அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். அதன்படி, மனிதவர்க்கத்தை மீட்பதற்காக பொருத்தமான பலியை கடவுள் ஏற்றுக்கொண்டார். பவுல் இவ்வாறு சொன்னார்: “இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.”—எபிரெயர் 10:5-10.
பலிபீடத்தில் சேவை செய்கையில், ஆசாரியர்கள் வழக்கமாக தங்களுடைய கைகளை தண்ணீரில் கழுவி தங்களை சுத்தம் செய்துகொள்வார்கள். அப்படியானால், பலிபீடத்தைச் சுற்றி நடப்பதற்கு முன்பு தாவீது ராஜா தன்னுடைய கைகளை “குற்றமில்லாமையிலே” கழுவினார். “மன உத்தமமும் செம்மையுமாய்” நடந்தார். (1 இராஜாக்கள் 9:4) இவ்விதமாய் தன்னுடைய கைகளை கழுவாதிருந்தால், அவருடைய வணக்கம்—அதாவது, அவர் ‘பலிபீடத்தை சுற்றிவருவது’—ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்திருக்காது. தாவீது லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவரல்ல என்பதால், பலிபீடத்தில் ஆசாரிய சேவை செய்வதற்கான பாக்கியம் அவருக்கு கிடைக்கவில்லை. அவர் ஒரு ராஜாவாக இருந்தாலும், ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்திற்குள்ளாகவும்கூட அவரால் போக முடியவில்லை. இருப்பினும், உண்மையுள்ள இஸ்ரவேலனாக, மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்திற்கு கீழ்ப்படிந்தார், தவறாமல் பலிபீடத்தில் தன்னுடைய பலிகளை செலுத்தினார். தன்னுடைய வாழ்க்கையில் தூய வணக்கத்திற்கு முதலிடம் கொடுக்கும் அர்த்தத்தில் பலிபீடத்தைச் சுற்றிவந்தார்.
இன்று நாமும் தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்ற முடியுமா? பின்பற்ற முடியும். இயேசுவின் பலியில் விசுவாசம் வைத்து, ‘கைகளில் சுத்தமும் இருதயத்தில் மாசில்லாதவர்களுமாய்’ இருந்தால், குற்றமில்லாமையிலே நம்முடைய கைகளை கழுவி, கடவுளுடைய பலிபீடத்தை சுற்றி வரலாம்.—சங்கீதம் 24:4.
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பலிபீடத்தின் பரப்பளவு சுமார் ஒன்பது சதுர மீட்டர்.
[பக்கம் 23-ன் படம்]
பலிபீடம் யெகோவாவின் சித்தத்தைக் குறிக்கிறது, இதன்மூலம் மனிதவர்க்கத்தை மீட்பதற்குரிய தகுதியான பலியை அவர் ஏற்றுக்கொள்கிறார்