இந்தக் காலத்துக்கு பைபிள் உதவுமா?
“முழு பைபிளில் 1 சதவீதம்தான் வாசிப்பதற்கு லாயக்கானது, மீதியெல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாதது, பழம்பாணியானது.” இப்படித்தான் ஓர் இளைஞன் கூறினான். அநேகர் அவன் சொன்னதை ஆமோதிப்பர். உலகிலேயே ‘பெஸ்ட்-செல்லர்’ என்ற பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது பைபிள். ஆனால் கோடா கோடி பேர் அதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை. அதிலுள்ள போதனைகள்தான் என்ன என்பதுகூட தெரியாமல் இருக்கிறார்கள்.
1996 கிறிஸ்மஸ் பதிப்பில், ஸூட்டைய்ச் ட்ஸைட்டுங் என்ற ஜெர்மானிய செய்தித்தாள் பைபிளைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டது: “பைபிளுக்கு வாசகர்கள் வெகுசிலரே. இந்த விஞ்ஞான யுகத்தில், மத ஆதிக்கம் மங்கி வரும் இந்த யுகத்தில், பைபிளிலுள்ள விஷயங்கள் அநேகருக்கு விநோதமாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் உள்ளன.” சுற்றாய்வுகள் இந்த அறிக்கையை உறுதிப்படுத்துகின்றன. இயேசு யாரென்றே அநேக பிள்ளைகளுக்கு இன்னும் தெரியாது என்பதை சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஒரு சுற்றாய்வில், பேட்டி கண்டவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே கெட்ட குமாரன், நல்ல சமாரியனைப் பற்றிய பைபிள் கதைகளை அறிந்திருந்தார்கள்.
முன்பு போல ஸ்விட்ஸர்லாந்தில் இப்பொழுது பைபிளுக்கு வரவேற்பு இல்லை என ரிஃபார்மிர்ட் ஃபோரம் என்ற ஸ்விட்ஸர்லாந்து இவான்ஜிலிக்கல் சர்ச் பிரசுரம் குறிப்பிடுகிறது. அப்படியே வீட்டில் ஒரு பைபிள் இருந்தாலும், அலமாரியில் தூசி படிந்த நிலையில் தூங்கத்தான் செய்கிறது. பிரிட்டனிலும் இதே நிலைதான். ஒரு சுற்றாய்வின்படி, அநேகரிடம் பைபிள் இருந்தாலும் பெரும்பாலானோர் அதை தொட்டுக்கூட பார்ப்பதில்லை.
மறுபட்சத்தில், பைபிளைப் பற்றி உலகமுழுவதிலும் உள்ள லட்சக்கணக்கானோரின் கருத்தே வேறு. அவர்கள் அதை கடவுளுடைய வார்த்தை என கருதுகின்றனர். மதிப்புமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் கருதுகின்றனர். ஆகவே, அதை தவறாமல் வாசிக்கின்றனர். ஓர் இளம் பெண் இவ்வாறு எழுதினாள்: “ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு அதிகாரங்களை வாசிக்க முயற்சி செய்கிறேன். அதை நான் மிகவும் அனுபவித்து மகிழ்கிறேன்.” இப்படிப்பட்டவர்கள் பைபிள் போதனையை கவனமாக ஆராய்கின்றனர். அதன் அறிவுரைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றனர். கொந்தளிப்பான இன்றைய உலகில் பைபிள் தங்களுக்கு உதவியளிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
உங்களுடைய அபிப்பிராயம் என்ன? பைபிள் நவீன காலத்திற்கு ஒத்துவராத புத்தகமா? அல்லது மதிப்புமிக்க, பயனுள்ள ஒன்றா? இந்தக் காலத்துக்கு பைபிள் உதவுமா?