“விசுவாசத்தால் தூண்டப்பட்ட நெஞ்சுரம்”
விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற லா டேம்வின் டி ஸெவோவா ஃபேஸ் ஏ ஈட்லர் (ஹிட்லருக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள்) என்ற பிரெஞ்சு மொழி புதிய நூல் 1998-ம் வருடம் வெளிவந்தது. இது கி கானோனிஸி என்பவரால் எழுதப்பட்டது. உயர்வாக மதிக்கப்படும் பிரெஞ்சு சரித்திராசிரியராகிய ஃபிரான்ஸ்வா பேடாரிடா இந்நூலின் அணிந்துரையில் இவ்வாறு எழுதினார்: “இது அதிகமாக வரவேற்கப்படும் ஒரு புத்தகம். விளக்கப்படாமல் விடப்பட்டவற்றை நிரப்புவதால் மட்டுமல்ல, ஆனால் சரியான நேரத்தில் வெளிவந்திருப்பதாலும்தான். . . . ஆய்வாளர்கள் தவிர, மூன்றாம் ஜெர்மானிய குடியரசின்கீழ் யெகோவாவின் சாட்சிகள் பட்ட துன்பத்தை அறிந்தவர் யார்? இருந்தாலும், 12 வருடகால ஆட்சி முழுவதும், ஈவிரக்கமற்ற முரட்டுத்தனத்தையும் வன்முறையையும் அவர்கள் அனுபவித்தார்கள். சித்திரவதை முகாம்களின் பயங்கர கொடுமைகளையும் அனுபவித்தார்கள். தங்களுடைய விசுவாசத்திற்காகவும் உறுதியான நம்பிக்கைக்காகவும் உயிரையும் துறந்தார்கள். இந்தக் கிறிஸ்தவர்களை சரித்திரம் ஏன் மறந்து விட்டது? . . .
பல திக்குகளில் சிதறியிருந்த, பிறருக்கு ஒரு தீங்குமிழைக்காத இந்தச் சின்னஞ்சிறிய மதத் தொகுதியினர்மீது ஏன் இவ்வளவு மூர்க்கத்தனமான, திட்டமிடப்பட்ட துன்புறுத்துதல்? ஒன்றோடு ஒன்று முரண்படுகிற, இயல்புக்கு மாறான உண்மை இதுவே. ஜெர்மானிய மக்கள் தொகையில் சாட்சிகள் சிறுபான்மையினரே—ஆறு கோடிக்கும் மேலான மக்கள் தொகையில் சுமார் 20,000 பேரே என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், சட்டத்தை மதித்து நடந்த, யாரையும் பயமுறுத்தாத, உழைத்து தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டுமென்று விரும்பிய அமைதியான குடிமக்கள் இவர்கள். . . .
“மனவுறுதியும் நெஞ்சில் துணிவும் எதையும் எதிர்த்து வெல்லும் ஆவிக்குரிய பலமும் படைத்த விசுவாசிகளுக்கு இந்தத் துன்புறுத்துதல் வந்தது. இவர்கள் வெளிப்புற சக்திகளை உட்புற சக்தியால், அதாவது இயேசுவின் மீதிருந்த விசுவாசத்தால் வெல்வதில் வல்லவர்களாய் இருந்தனர். சர்வாதிகார ஆட்சியின் வன்முறையை தாங்கி, வீரச் சாதனையும் உயிர்த் தியாகமும் செய்யும் அளவுக்கு வல்லவர்களாய் இருந்தனர்.”
மத சகிப்பின்மையின் காரணமாக தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக உயிர்விட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரம் வலிமைமிக்க ஒன்று. இந்தப் புத்தகத்தை விமர்சிக்கையில் லா கிர்வா என்ற பிரபல பிரெஞ்சு கத்தோலிக்க செய்தித்தாள் காரசாரமாக குறிப்பிட்டது: “அவர்களை [யெகோவாவின் சாட்சிகளை] பற்றி அதிகமாக அறியப்படாதபோதிலும், கி கானோனிஸி நம்பத்தகுந்த ஏராளமான சாட்சிகளை திரட்டியிருக்கிறார். விசுவாசத்தால் தூண்டப்பட்ட நெஞ்சுரத்தைப் பார்க்கையில் அது ஒருவரை வாயடைக்கச் செய்கிறது. அவர்களுடைய பிள்ளைகளும்கூட முடிவுவரை முறிக்கமுடியாத விசுவாசத்தைக் காண்பித்தனர். இந்த நினைப்பூட்டுதல் யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ தன்மையைப் பற்றிய தற்போதைய விவாதத்திற்கு ஒரு பின்னணியை அளிக்க வேண்டும்.”