“இப்பேர்ப்பட்ட மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்”
குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுபவர்கள் என சிலசமயங்களில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி சிலர் நேரடியாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் ஒரே ஒரு துணை மட்டுமே யெகோவாவின் சாட்சியாக இருந்து வெற்றி விழா காணும் எண்ணற்ற திருமணங்கள் இதை பொய்க் குற்றச்சாட்டென ஆணித்தரமாக நிரூபித்திருக்கின்றன. மண வாழ்க்கையில் பைபிள் புத்திமதிகளைப் பின்பற்றுவது சந்தோஷம் பொங்கும் தாம்பத்திய வாழ்க்கைக்கு உறுதுணை புரிவதை பிரெஞ்சு செய்தித்தாள் பிரசுரித்த பின்வரும் கடிதம் படம்பிடித்துக் காட்டுகிறது.
“இப்பேர்ப்பட்ட மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். யெகோவாவின் சாட்சியாக இப்போது இருக்கும் என் மனைவியோடு கிட்டத்தட்ட 28 வருடங்களாக மணவாழ்க்கையை அனுபவித்து வருகிறேன். என் ஐந்து பிள்ளைகளையும் அவள் கண்மணிபோல் காத்து வளர்த்தாள். அவர்களில் இருவர் அவள் வயிற்றில் சுமந்த செல்வங்கள் அல்ல. ஆனால் பாரபட்சமில்லாமல் பாசமழை பொழிந்தாள். நானோ 45 பேரை வைத்து வேலைவாங்கும் ஒரு கம்பெனியின் டைரக்டர். தொழில்ரீதியில் என் வெற்றிக்குப் பின்னால் இருப்பவளும் என் மனைவியே என்பதை அடித்துச் சொல்ல முடியும். யெகோவாவின் சாட்சிகள் லடேகாரன் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என நான் வாங்கும் நாளிதழில் வந்த ஒரு கட்டுரையைப் பார்த்தேன். அதற்குப் பதில் தரும் விதத்தில் ஆதாரப்பூர்வமான அத்தாட்சியைக் கொடுக்க இதை எழுதுகிறேன்.”
அந்தக் கடிதம் தொடர்ந்து சொன்னதாவது: “அவர்கள் புகைப்பதில்லை, குடிகாரர்களும் கிடையாது. அதையா அச்சுறுத்தல் என குறிப்பிடுகிறீர்கள்? தாங்கள் கடைப்பிடிக்கும் சட்டதிட்டங்களைப் பின்பற்றும்படி யாரையும் வற்புறுத்தாத பொறுமைசாலி கிறிஸ்தவர்கள். பலவிதங்களில் பலருக்கும் உதாரண புருஷர்களாய் திகழ்கிறார்கள். . . . பண மோசடிகளில் அவர்கள் பெயர் அடிபடாது, போதை மருந்து கடத்தல்களில் ஈடுபடாதவர்கள். அவர்கள் துறவற வாழ்க்கைக்குக் கட்டுப்பட்டவர்கள் என சொல்லிக் கொள்வதில்லை; ஆனால் அவர்கள் எல்லாரையும் போல் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள் என்பதற்கு நான் ஜவாப்தாரி. . . .
“ஒருவேளை நீங்கள் என்னை கேட்கலாம்: பின்பு ஏன் நீங்கள் மட்டும் யெகோவாவின் சாட்சியாகவில்லை? என்று. கிறிஸ்தவ விசுவாசமும் ஒழுக்க தராதரங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதும் அதற்கு அவசியம். இவை பொதுவாக எல்லாரிடமும் காணப்படாதவை என்பதே காரணம்.”