நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா?
“நான் வெளிச்சத்தைக் காணவேண்டும்.” இவை, இத்தாலிய கவிஞர் ஜாக்கோமோ லியோபார்டீ கூறிய வார்த்தைகள். அவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது அவரைக் கவனித்துக் கொண்டவர்களிடம் இவ்வாறு கூறினாராம். மனிதனுக்கு வாழ்க்கை மேல் இருக்கும் மோகத்தை இந்த வார்த்தைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. வாழ்க்கை பொதுவாக வெளிச்சத்தோடு தொடர்புபடுத்தி பேசப்படுகிறதல்லவா?
வாழ்க்கையோடு மனிதனுக்கிருக்கும் பிணைப்பு அருமையான ஒரு தூண்டுதலாகும். அதனால்தான் ஆபத்தைத் தவிர்த்து தொடர்ந்து உயிர்வாழ அநேகர் பெருமுயற்சி செய்கின்றனர். இந்த விதத்தில் மனிதனுக்கும் மிருகத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. ஏனென்றால் உயிர்வாழ வேண்டும் என்ற இயல்புணர்ச்சி அவற்றிற்கும் இருக்கிறதல்லவா?
ஆனால், நாம் வாழ்ந்து அனுபவிக்க முற்றிலும் ஏற்ற வாழ்க்கை எப்படிப்பட்டது? வெறுமனே நடைபிணமாக திரிவது வாழ்க்கையல்ல. அனுபவி-ராஜா-அனுபவி என்ற போக்கிலிருந்தும் உண்மையான திருப்தி கிடைப்பதில்லை. “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற எப்பிக்கூரர்களின் தத்துவம் பொதுவாகவே மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. (1 கொரிந்தியர் 15:32) மனிதனுக்கு அநேக அடிப்படை பொருளாதார தேவைகள் உள்ளன என்பது உண்மையே. அதோடு, கலாச்சார, சமூக விருப்பங்களும், சர்வசக்தி படைத்த ஒருவரில் விசுவாசம் வைப்பது சம்பந்தப்பட்ட தார்மீக தேவைகளும் உள்ளன. பூமியின் பல்வேறு பகுதிகளில் சமூக, சுற்றுச்சூழல் நிலைமைகள் மிக மோசமாக இருப்பதால் கோடிக்கணக்கான, ஏன் கோடானகோடி ஆட்கள் கடனே என்றுதான் வாழ்ந்து வருகிறார்கள். சாப்பாடு, குடி, பணம், செக்ஸ் போன்ற சரீர தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்வதில் திருப்தியடையும் ஆட்கள் ஏறக்குறைய சிற்றின்ப வாழ்க்கையிலேயே சுழன்று வருகிறார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு ஓரளவு திருப்தியே கிடைக்கிறது. மனித அறிவாற்றலையும் உணர்ச்சிகளையும் பூர்த்திசெய்ய இந்த வாழ்க்கை ஏராளமான வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. இருந்தும், இவர்கள் அர்த்தமுள்ள அந்த வாய்ப்பு வளங்களை சீண்டுவதுகூட கிடையாது. தங்கள் தன்னல விருப்பங்களை மாத்திரமே பூர்த்திசெய்துகொள்ள விரும்பும் ஆட்களும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க தவறுகின்றனர். அதோடு, அவர்கள் வாழும் சமுதாயத்தையும் கெடுத்து, மற்றவர்களைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த விஷயத்தை, இளம் குற்றவாளிகளைக் கையாளும் ஒரு நீதிபதி ஒப்புக்கொள்கிறார்: “மதிப்பீடுகளின் சரிவு, நல்ல முன்னுதாரணமாய் இல்லாதவர்கள் புகழப்படுவது, திடீர் பணக்காரரின் வெற்றி” ஆகியவை “பேரளவு போட்டி மனப்பான்மையைத் தூண்டுகின்றன.” இதனால், சமூகத்திற்கு தீங்கு ஏற்படுவதுடன் இளைஞரின் வாழ்வும் நாசமடைகிறது. முக்கியமாய் இளைஞர்கள் போதைப்பொருட்களை உபயோகிக்கையில் அவ்வாறு நடக்கிறது.
வாழ்க்கையில் கவர்ச்சியூட்டும் அநேக விஷயங்கள் உள்ளன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். உதாரணமாக, நெஞ்சத்தைக் கொள்ளைகொள்ளும் இடங்களில் விடுமுறையை கழித்தல், ஆர்வமூட்டும் ஆராய்ச்சி அல்லது படிப்பு, சந்தோஷமான கூட்டுறவு, இன்னிசை போன்றவை. திருப்தி தரும் மற்ற அநேக விஷயங்களும் உள்ளன. கடவுளில், முக்கியமாக பைபிளின் கடவுளாகிய யெகோவாவில், ஆழமான விசுவாசம் வைப்போருக்கு வாழ்வை நேசிக்க இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. கஷ்டமான காலங்களைச் சமாளிக்க உதவும் பலத்தையும் அமைதியையும் பெற உண்மையான விசுவாசம் நமக்கு உதவுகிறது. உண்மையான கடவுளில் நம்பிக்கை வைப்பவர்கள், ‘யெகோவா எனக்குச் சகாயர், நான் பயப்படேன்’ என்று நம்பிக்கையுடன் சொல்லலாம். (எபிரெயர் 13:6) கடவுளுடைய அன்பை அறிந்தவர்கள் அவர் தங்களிடம் அன்புகூருகிறார் என்பதை உணருகிறார்கள். அவருடைய அன்பையே இவர்களும் வெளிக்காட்டுகிறார்கள், அதன் விளைவாக ஆழ்ந்த சந்தோஷமும் அடைகிறார்கள். (1 யோவான் 4:7, 8, 16) அதனால், திருப்தியின் ஊற்றுமூலமாய் இருக்கும் சுயநலமற்ற, சுறுசுறுப்பான வாழ்க்கையை அவர்களால் வாழமுடிகிறது. இது, “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என இயேசு கிறிஸ்து சொன்னதற்கு இசைவாகவே உள்ளது.—அப்போஸ்தலர் 20:35.
வாழ்க்கை என்னும் நாணயத்திற்கு வருத்தந்தரும் மற்றொரு பக்கமும் உள்ளது. துன்பம், அநீதி, ஏழ்மை, வியாதி, மரணம் போன்றவை எங்கும் தலைவிரித்தாடுகின்றன. வாழ்க்கையை சகிக்க முடியாமலாக்கும் அநேக துக்கந்தரும் காரியங்களில் இவை ஒரு துளி மட்டுமே. பூர்வ இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாகிய சாலொமோனிடம், மக்களை மகிழ்விக்கத் தேவையான பணம், அதிகாரம், ஞானம் போன்றவற்றிற்கு குறைவே இருக்கவில்லை. ஆனாலும் அவருக்கு வருத்தம் தந்த ஒரு விஷயம் இருந்தது. அதுவே, அவருடைய “புத்தி, யுக்தி, நிதானத்தோடு” சம்பாதித்த எல்லா பிரயாசத்தையும் மரணத்தின்போது வேறொருவனுக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்ற உணர்வு.—பிரசங்கி 2:17-21.
வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்பதை சாலொமோனைப் போலவே இன்று அநேகர் உணருகின்றனர். அது இறக்கைக்கட்டி வேகமாய் பறந்துபோகிறது. கடவுள் ‘நம்முடைய மனங்களில் நித்தியகால நினைவை வைத்திருக்கிறார்’ என வேதவசனங்கள் சொல்கின்றன. (பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு) இந்த நித்தியகால உணர்வு மனிதனுக்கு இருப்பதால், வாழ்க்கை ஏன் இவ்வளவு குறுகியதாய் உள்ளது என அவன் சிந்திக்கிறான். வாழ்க்கை, மரணம் ஆகியவற்றைப் பற்றி ஒருவருக்கு திருப்தியளிக்கும் பதில் கிடைக்கவில்லை என்றால் கடைசியில் அவர் ‘வாழ்வே மாயம்’ என்ற எண்ணத்தால் பாதிக்கப்படலாம். இதனால் வாழ்க்கையே சோகமயமாகும்.
மனிதனை வேதனைப்படுத்தும் இந்தக் கேள்விகளுக்கு பதில் உள்ளதா? வாழ்க்கையை அதிக சுவையுள்ளதாயும் நிலையானதாயும் ஆக்கும் நிலைமைகள் எப்போதாவது வருமா?