இஸ்ரேலில் உச்சரிக்கப்பட்ட தெய்வீக பெயர்
யெகோவா என்ற தெய்வீக பெயரை உச்சரிக்க கூடாது என காலம் காலமாகவே யூதமத பாரம்பரியம் அதன் அங்கத்தினர்களுக்கு கண்டிப்புடன் தடைவிதித்திருக்கிறது. கடவுளுடைய பெயரை உச்சரிக்கிற எவருக்கும் “வரக்கூடிய உலகில் எந்தப் பங்குமில்லை” என மிஷ்னா கூறுகிறது.—சான்ஹெட்ரின் 10:1. a
ஜனவரி 30, 1995 அன்று, இஸ்ரேலை சேர்ந்த முன்னாள் ‘செப்பார்டிக்’ முதன்மை ரபீ, வேண்டுமென்றே அந்தத் தெய்வீக பெயரை உச்சரித்தார். டிகூன், அதாவது யூத கபாலா பக்தர் சொல்லும் ஜெபத்தை மனப்பாடமாக கூறுகையில் அந்தப் பெயரை உச்சரித்தார். இப்பிரபஞ்சத்தில் கடவுள் மீண்டும் ஒற்றுமையை நிலைநாட்ட இந்த ஜெபம் சொல்லப்படுகிறது. இப்பிரபஞ்சத்தில் தீய சக்திகள் ஊடுருவியுள்ளன என்பது அந்த வணக்கத்தாருடைய நம்பிக்கை. பிப்ரவரி 6, 1995 தேதியிட்ட யெடியாத் ஆஹாராநாத் என்ற செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “பொது மக்களுக்கு விற்கப்படாத ஒரு விசேஷித்த புத்தகத்தில் மாத்திரமே அந்த வார்த்தைகள் காணப்படுகின்றன. அந்த அளவுக்கு இது நம்பமுடியாத ஒரு சக்தியாய் உள்ளது.” இப்படிப்பட்ட சூழமைவில் கடவுளுடைய பெயரால் கூப்பிடுவது அந்த வேண்டுகோளுக்கு விசேஷ சக்தி தருவதாக கருதப்படுகிறது.
யெகோவா என்ற தெய்வீக பெயரை கடவுளுடைய ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என பைபிள் கட்டளையிடுவது குறிப்பிடத்தக்கதாகும். (யாத்திராகமம் 3:15; நீதிமொழிகள் 18:10; ஏசாயா 12:4; செப்பனியா 3:9; NW) பைபிளின் எபிரெய மூலப்பிரதியில், அந்தப் பெயர் ஏறக்குறைய 7,000 தடவை வருகிறது. ஆனால், கடவுளுடைய பெயரை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறது. பத்துக் கட்டளைகளில் மூன்றாம் கட்டளை இவ்வாறு கூறுகிறது: “உன் கடவுளாகிய யெகோவாவின் திருநாமத்தை வீணிலே வழங்காதே, தமது திருநாமத்தை வீணிலே வழங்குகிறவனை யெகோவா தண்டியாமல் விடார்.” (யாத்திராகமம் 20:7, திருத்திய மொழிபெயர்ப்பு) கடவுளுடைய பெயர் எவ்வாறு வீணிலே வழங்கப்படலாம்? ‘வீணிலே வழங்குதல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, தெய்வீக பெயரை “அற்பமாக பயன்படுத்துவதை” குறிக்கிறது; அது மட்டுமல்லாமல், “தேவையற்ற ஆசீர்வாதத்திற்காக ஒப்பிப்பதையும்” உட்படுத்துகிறது என ஜூவிஷ் பப்ளிகேஷன் சொஸைட்டி வெளியிட்டுள்ள விளக்கவுரை நூல் குறிப்பிடுகிறது.
அப்படியானால், யூத கபாலா பக்தர் சொல்லும் டிகூன் ஜெபத்தை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்? அதன் தோற்றம் என்ன? 12-ம் மற்றும் 13-ம் நூற்றாண்டுகளில், கபாலா என்றழைக்கப்படும் மறைபொருள் சார்ந்த யூதமதம் பிரபலமாகத் தொடங்கியது. 16-ம் நூற்றாண்டில், ஐசக் லுரியா என்ற ரபீ “டிகூனிம்” என்பதை கபாலா வழிபாட்டுக்குள் அறிமுகப்படுத்தினார். கடவுளுடைய பெயர் விசேஷ வல்லமைகள் கொண்ட ஒரு மந்திர சக்தியாக பயன்படுத்தப்பட்டது. அது கபாலா சடங்குமுறையின் பாகமாக ஆனது. இப்படி செய்வது கடவுளுடைய பெயரை தகுந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்களா?—உபாகமம் 18:10-12.
இதற்கு நீங்கள் எப்படி பதிலளித்தாலும்சரி, நவீனகால இஸ்ரேலில் கடவுளுடைய பெயரை வெளிப்படையாக உச்சரிப்பது மிகவும் அசாதாரணமான சம்பவமாய் இருந்ததை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். ஆனால், கடவுள்தாமே இவ்வாறு முன்னறிவித்தார்: “அக்காலத்திலே நீங்கள் பாடி: யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருநாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய திருச்செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய திருநாமமே உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள். யெகோவாவைத் துதித்துப்பாடுங்கள்; அவர் மகத்துவமானவைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படுக.”—ஏசாயா 12:4, 5, தி.மொ.
மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், உலகமுழுவதும் 230 தேசங்களில் செய்யப்படுவதுபோல, இஸ்ரேலில் உள்ளவர்களும் யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய யெகோவாவின் சாட்சிகள் எல்லா முயற்சியும் செய்துவருகிறார்கள். சங்கீதம் 91:14-ஐப் போன்ற வசனங்களின் அர்த்தத்தை இன்னும் அநேகர் புரிந்துகொள்வார்கள் என்பதே அவர்களுடைய நம்பிக்கை. அந்த வசனம் இவ்வாறு வாசிக்கிறது: “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.”
[அடிக்குறிப்புகள்]
a மிஷ்னா என்பது பைபிளின் நியாயப்பிரமாணத்திற்கு பிற்சேர்க்கையாக இருக்கும் விளக்கவுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. இது, டானாயீம் (ஆசிரியர்கள்) என்றழைக்கப்படும் ரபீக்களுடைய விளக்கங்களை அடிப்படையாக கொண்டது. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது.
[பக்கம் 28-ன் படம்]
யெகோவாவின் பெயரும் அவருடைய வார்த்தையும் இங்கே நேகேப்பில் அவருடைய மக்களால் அறிவிக்கப்படுகிறது
[பக்கம் 29-ன் படம்]
தெய்வீக நாமத்தை விளம்பரப்படுத்தும் போஸ்டர்