அழகு பொருட்களைவிட அழகூட்டும் ஒன்று
பெண்கள் தங்களை அலங்கரிக்கும் ‘வெளிப்படையான அலங்கார’ பொருட்களைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, அப்போஸ்தலனாகிய பேதுரு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.”—1 பேதுரு 3:3, 4, பொ.மொ.
இதில் நம் ஆர்வத்தைத் தூண்டும் விஷயம் என்னவென்றால், வெளி அலங்காரத்தைப் பற்றி அந்த அப்போஸ்தலன் எழுதுகையில், காஸ்மாஸ் என்ற கிரேக்க சொல்லை பயன்படுத்தினார்! இதே சொல் “அழகை, அதிலும் குறிப்பாக சரும அழகை” குறிக்கும் “காஸ்மட்டிக்ஸ்” என்ற ஆங்கில சொல்லுக்கு வேர்சொல்! அப்படியென்றால், கிறிஸ்தவ பெண்கள் எந்தவித மேக்கப்பும் போடக்கூடாது, அழகுசாதன பொருட்களை உபயோகிக்கக்கூடாது என்று ஏதாவது தடையை பேதுரு விதித்தாரா? அவர் தடைவிதித்தார் என்பதற்கு கடவுளுடைய வார்த்தையில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஆகவே இந்த மேக்கப் விஷயம் தனிப்பட்டவருடைய இரசனையையும் விருப்பத்தையும் பொருத்தது.
ஆனால், மேக்கப்பை அளவுக்கு அதிகமாக அப்பிக்கொள்ளும்போது அல்லது ஆட்களை அசத்துவதற்காக பூசிக்கொள்ளும்போது, நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? எதற்கும் துணிந்தவர்கள், அடக்க ஒடுக்கம் இல்லாதவர்கள், கேவலமானவர்கள், ஜம்பம் அடிப்பவர்கள், தன்னலம் உள்ளவர்கள் என்று நம்மைப் பற்றி மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா? இதுபோன்ற மேக்கப் ஒரு பெண்ணின் தோற்றத்தையே தரக்குறைவாக எடைபோட வைத்துவிடும். கெட்ட நடத்தை உள்ளவள் என்ற தப்பான முத்திரையையும் குத்தினாலும் குத்திவிடும்.—எசேக்கியேல் 23:36-42-ஐ ஒப்பிடுக.
எனவேதான், ‘தேவபக்தியுள்ளவள் என்று சொல்லிக்கொள்கிற’ பெண் மேக்கப் பொருட்களை உபயோகிக்க நினைத்தால், அவள் தெளிந்த புத்தியுள்ளவள், மென்மையானவள், இரக்கமுள்ளவள், தன்னடக்கமுள்ளவள் என்பதை அவளது முகம் சுட்டிக்காட்டும் வகையில் மேக்கப் போடவேண்டும். இத்தகைய குணங்கள் அவளது நளினத்தையும், அழகையும் மேலும் ஜொலித்திட செய்யும். அவள் மேக்கப் போட்டாலும்சரி, போடாவிட்டாலும்சரி, கண்ணியத்தையும், அகத்தின் அழகையும் வெளிக்காட்டுவாள். பேதுரு சொன்ன அறிவுரையில், அழகு பொருட்களைவிட அழகூட்டும் ஒன்று உள்ளது என்பதை அவள் அறிந்துகொண்டதையும் வெளிக்காட்டுவாள்.—1 தீமோத்தேயு 2:9, 10.