வன்முறை—விரைவில் அடியோடு ஒழிக்கப்படும்!
“நாட்டில் வன்முறை புயல்”—த நியூ யார்க் டைம்ஸ், ஐக்கிய மாகாணங்கள்.
“வீட்டில் வன்முறை”—யூ குளோபூ, பிரேஸில்.
“பெண்களை வன்முறை வேட்டையாடுகிறது”—த குளோப் அண்ட் மெய்ல், கனடா.
மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து வரும் இந்தத் தலைப்புச் செய்திகள் அமைதியைக் குலைக்கும் உலகளாவிய போக்கை படம்பிடித்துக் காட்டுகின்றன. “சமீப பத்தாண்டுகளில் வன்முறை எல்லா விதங்களிலும் பயங்கரமாக அதிகரித்துவிட்டது” என கொஞ்ச காலத்திற்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
சிந்திக்க வைக்கும் புள்ளிவிவரங்கள் சிலவற்றை கவனியுங்கள்:
கொலைகள். லத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும், ஒவ்வொரு நாளும் சுமார் 1,250 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். இதன் விளைவாக, “இந்தப் பகுதியிலுள்ள பாதி நாடுகளில், 15-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞருக்கு ஏற்படும் மரணத்தில் படுகொலையே இரண்டாவது முக்கிய காரணம்.”
பிள்ளைகளுக்கு எதிராக வன்முறை. சரீர, பாலின, உணர்ச்சி ரீதியாக பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது உலகளாவிய பிரச்சினை. உதாரணமாக, “10–15 சதவீத பிள்ளைகள்—அவர்களில் பெரும்பாலானோர் பெண் பிள்ளைகள்—பாலின துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக தொழில்மயமாக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் வயது வந்தோர் மத்தியில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டுகிறது.”
பெண்களுக்கு எதிராக வன்முறை. 1997-ல் உலகமுழுவதும் செய்யப்பட்ட மனித உரிமைகள் துஷ்பிரயோகத்தை ஆராய்ந்த பிறகு, “உலகிலுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிலும், தாய்க்குலம் காயமடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வீட்டில் நடைபெறும் வன்முறையே” என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். (ஹியூமன் ரைட்ஸ் உவாட்ச் உவர்ல்டு ரிப்போர்ட் 1998) பரவலாக காணப்படும் ஆனால் அறிக்கை செய்யப்படாத பிரச்சினையாகிய வீட்டு வன்முறை, இப்பொழுது “20-ம் நூற்றாண்டின் மௌனமான பிரச்சினை” என அழைக்கப்படுகிறது.—த குளோப் அண்ட் மெய்ல், கனடா.
இதேபோலவே, நோவாவின் நாளில் இந்தப் பூமி ‘வன்முறையால் நிறைந்திருந்தது.’ (ஆதியாகமம் 6:9-12) ஆனால், யெகோவா தேவன் “அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி”யபோது, ‘நீதியை பிரசங்கித்த நோவாவையும்’ அவருடைய குடும்பத்தாரையும் காப்பாற்றினார். அதைப் போலவே நம்முடைய நாளிலும் கடவுள் நடவடிக்கை எடுப்பார். வன்முறையையும் துன்மார்க்கத்தையும் நீக்கி, வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில் இந்தப் பூமியை ஒரு பூங்காவனமாக மாற்றும்போது, ‘தேவபக்தியுள்ளவர்களை’ காப்பாற்றுவார். (2 பேதுரு 2:4-9; 3:11-13) வன்முறை விரைவில் அடியோடு ஒழிக்கப்படுவதை அறிந்துகொள்வது உங்களை மெய்சிலிர்க்க வைக்கவில்லையா?