உலக சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
உலகம் முழுவதிலும் ஒரே கல்வியும் ஒரே மதமும் இருந்தால் உலக சமாதானம் வந்துவிடுமா? ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலரும் சமாதான கல்விக்கான 1989 யுனெஸ்கோ பரிசை பெற்றவருமான ராபர்ட் முல்லருடைய கனவு இதுவே. இவர் “கிரகத்தையும் மனிதநேயத்தையும் அகிம்சையையும் பற்றிய உண்மைகளையும் மதிப்பீடுகளையும் குறித்து உலகிலுள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைப்பதாக” த வான்கூவர் சன் செய்தித்தாள் அறிவித்தது. ஐநாவே சமாதானத்திற்கான மிகச் சிறந்த நம்பிக்கை என்பதை எல்லா கல்வி நிறுவனங்களும் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் நாளை எதிர்நோக்கியிருக்கிறார். “ஐநா-வைப் போன்று உலகிலுள்ள எல்லா மதங்களும் ஐக்கிய மதங்கள் என்றழைக்கப்படும் ஒரு புதிய அமைப்பின் அங்கத்தினர்களாய் ஆக வேண்டும்” என்றும் அவர் நினைப்பதாக சன் அறிவித்தது. அப்போது “எல்லா மத போதனையும் அகிம்சையை முன்னேற்றுவிக்கும்.”
உலக சமாதானம் என்றாவது நனவாகுமா? நிச்சயமாகவே நனவாகும்! இதில் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால் எந்தவித மனித அமைப்பின் மூலமும் அல்ல. 2,700-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பே, நேர்மை இருதயமுள்ளோர் ‘யெகோவாவால் போதிக்கப்படுவர்’ என்றும் அவர்களுடைய சமாதானம் ‘நிறைவாக’ இருக்கும் என்றும் ஏவப்பட்ட எழுத்தாளர் ஒருவர் முன்னறிவித்தபோது சமாதானத்தை புகட்டும் கல்வியின் மேம்பட்ட ஊற்றுமூலத்தை அடையாளம் காட்டினார்.—ஏசாயா 54:13, NW.
‘சமாதானத்தை தருகிறவர்’ கடவுளே என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 16:20, NW) இப்பொழுதே, வியக்கத்தக்க பூகோள கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது; ஏனென்றால் ‘சமாதானத்தை தேடி அதைப் பின்தொடரும்படியும்’ ‘தங்கள் வாள்களை கலப்பைக் கொழுக்களாக அடிக்கும்படியும்’ ‘இனி யுத்தத்தைக் கற்காமல்’ இருக்கும்படியும் யெகோவா தம்முடைய மக்களுக்குப் போதிக்கிறார்.—1 பேதுரு 3:11; ஏசாயா 2:2-4, பொ.மொ.
சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த, மாய்மாலமும் வஞ்சகமும் இல்லாத வணக்கமே கடவுளால் அங்கீகரிக்கப்படுகிறது, ஆசீர்வதிக்கப்படுகிறது. (மத்தேயு 15:7-9; யோவான் 4:23, 24) கடவுளுடைய வார்த்தைக்கு முழு இசைவாக உள்ள மெய் வணக்கம் மட்டுமே, சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்கிற, ஒருவரையொருவர் நெஞ்சார நேசிக்கிற மக்களைப் பிறப்பிக்க முடியும்.—யோவான் 13:35.
கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்வதற்கு, இப்பத்திரிகையை பிரசுரிப்போருடன் தொடர்புகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.