உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 2/15 பக். 3
  • மணம் முடிக்க மனம் உண்டா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மணம் முடிக்க மனம் உண்டா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • மணவாழ்வு —சூறாவளியைத் தாக்குப்பிடிக்குமா?
    விழித்தெழு!—2006
  • இன்றைய உலகில் மணவாழ்க்கை செழிக்க முடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • திருமணம் முறிவுறும் நிலையில் இருக்கிறதென்றால்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • உங்கள் விவாகத்திற்கு நல்ல அஸ்திபாரத்தைப் போடுதல்
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 2/15 பக். 3

மணம் முடிக்க மனம் உண்டா?

வையகம் முழுவதும் நிகழ்கிற விவாகரத்துக்களை ஒரு பூகம்பத்திற்கு ஒப்பிட்டால், அது மையம் கொள்ளும் இடம் ஐக்கிய மாகாணமாகத்தான் இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு, அங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான ‘மணப் பந்தல்கள்’ ‘கிழிந்த கந்தல்கள்’ ஆயின—அதுவும் சராசரியாக நிமிடத்திற்கு இரண்டு என்ற வீதத்தில். கல்யாணம் எனும் சுகவாழ்வு சோக வாழ்வாகும் இந்த அவல நிலைக்குள் சிக்கித் தவிப்பது ஐக்கிய மாகாணம் மட்டுமல்ல, அகிலமேதான் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

கனடா, இங்கிலாந்து, வேல்ஸ், பிரான்ஸ், கிரீஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 1970 முதல், விவாகரத்து எண்ணிக்கை இருமடங்குக்கும் அதிகமாகிவிட்டது என ஓர் ஆய்வு காட்டியது.

நேசக்கரம் பிடித்து வாழ்நாள் முழுக்க உனக்கு நான், எனக்கு நீ என இனிக்க இனிக்க வாழ்வை சுவைக்கும் ஆசையோடுதான் தம்பதிகளில் அநேகர் திருமண பந்தம் எனும் உறவுக்குள் நுழைகின்றனர். இது எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், இன்பம் பொங்கும் மணவாழ்வு வாழ அவர்கள் கண்ட கனவெல்லாம் வெறும் பகல்கனவாக கலைந்துபோவதே இதிலுள்ள சோகம். நிஜங்கள் நிழல்களாய் மாறும்போது, ஏன்தான் அவசரப்பட்டு கல்யாணம் செய்தேனோ, போயும் போயும் ஏன்தான் இவரை மணந்தேனோ என்றெல்லாம் அநேகர் பல்லவி பாட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஏன் நிறைய திருமணங்கள் தோல்வியைத் தழுவுகின்றன? திருமண நோக்குடன் பழகுவதைப் பற்றிய ஒரு புத்தகத்தின் எழுத்தாளர் இவ்வாறு சொல்கிறார்: “திருமணத்திற்காக ஒருவர் தன்னை தயார்படுத்திக்கொள்ள தவறுவதே முக்கியமான காரணம். மணவாழ்க்கைப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு வெளியேற வழி தெரியாமல் தவிக்கிற தம்பதிகளிடம் பேசும்போதெல்லாம் எனக்குள் பொங்குவது பரிவும் கோபமும். பரஸ்பர திருப்தியைத் தருகிற ஒரு உறவே அவர்கள் கண்ட கனவு. அந்தக் கனவை நனவாக்க வழி தெரியாமல் அவர்கள் தவிக்கையில் அவர்கள்மேல் பரிவு ஏற்படுகிறது. இது விளையாட்டல்ல, சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்பதை அறியாமல் இருக்கிறார்களே என ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.”

மகிழ்ச்சிபொங்கும் மண வாழ்க்கையின் இரகசியம் என்ன என்பதைப் பற்றி அ, ஆ, இ, ஈ தெரியாமலோ அல்லது அறைகுறையாக அறிந்துகொண்டோதான் அநேகர் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கின்றனர். இது ஒன்றும் ஆச்சரியம் தருகிற விஷயமல்ல. கல்வியாளர் ஒருவர் குறிப்பிட்டார்: “காலேஜுக்கு போய் எலி, பல்லிகளின் இயல்பை பற்றி கற்றுக்கொள்கிற இன்றைய இளைய தலைமுறையினரில் எத்தனை பேர் கணவன் மனைவி எனும் நபர்களின் இயல்பை கற்றுக்கொள்கிறார்கள்?”

மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க மனம் உண்டா? அல்லது ஏற்கெனவே திருமணமாகியிருந்தால், அதைப் பற்றி மனதில் அசைபோடுகிறீர்களா? அப்படியானால், சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் காதல் காவியங்களிலும் சித்தரிக்கப்படும் வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே பெரும் பிளவு இருப்பதை நீங்கள் மனதிற்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஒருவரையொருவர் நேசிக்கிற பக்குவப்பட்ட இரு உள்ளங்கள் இணைகிற வாழ்க்கை இறைவன் அருளும் வரமே. (நீதிமொழிகள் 18:22; 19:14) அப்படியானால், திருமண வாழ்க்கை எனும் சவாலை சமாளிக்க நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? மணமக(ளை)னை தேர்ந்தெடுக்கையில் எதையெல்லாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்? அல்லது நீங்கள் ஏற்கெனவே மணமேடை கண்டிருந்தால், உங்கள் இல்லறம் என்றும் நல்லறமாக செழிக்க என்ன செய்யலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்