“பிள்ளையை பழக்குங்கள்”
உங்கள் தோட்டம் பூத்துக் காய்த்துக் குலுங்க என்ன செய்யவேண்டும்? கொஞ்சம் விதைகளைத் தூவிவிட்டு பிறகு அறுக்கும் நேரத்துக்கு மட்டும் போனால் போதுமா? நிச்சயம் போதாது. கடின உழைப்பு தேவை. நிலத்தைப் பண்படுத்தி, விதைத்து, பின் நீர்பாய்ச்சி, உரம் போட்டு, நன்கு பாதுகாத்து வளர்த்தால்தான் செடி, கொடிகள் நன்றாக வளர்ந்து பலன் தரும்.
இந்த உதாரணத்தை நீதிமொழிகள் 22:6-ஐ (NW) விளக்க பயன்படுத்தலாம். அதாவது, “நடக்க வேண்டிய வழியிலே பிள்ளையை பழக்குங்கள்; அவன் முதிர் வயதிலும் அதைவிட்டு விலகாதிருப்பான்.” பிள்ளை நன்கு வளர்ந்து ஆளாக பெற்றோர் தரும் பயிற்சி மிக முக்கியம்.
இன்றைய தறிகெட்ட உலகில் அநேக பெற்றோர் இந்த ஆலோசனையைப் பின்பற்ற தவறுகின்றனர். பிள்ளைகளே சொந்தமாக பிரச்சினைகளைத் தீர்க்க பழகிக்கொள்ள வேண்டும் என்பது இன்று பொதுவாய் நிலவும் கருத்து. இதைப் பெற்றோர் கடைப்பிடிக்கையில் பிள்ளைகள் இஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் தங்கள் போக்கில் செய்வர். கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த கதையாய், சூதுவாதுள்ள நெறிகெட்ட ஆட்களின் தீய செல்வாக்கிற்கு அவர்கள் ஆளாக பெற்றோரே காரணமாகிவிடுகின்றனர்.—நீதிமொழிகள் 13:20.
கொடி இளசாக இருக்கையில் வளைப்பது மிகவும் எளிது. அதுபோல பிள்ளைகளை இளமையிலே கடவுளுடைய சட்டதிட்டங்களுக்கு ஏற்ற வழியில் நடத்துவதும் மிக எளிது, புத்திசாலித்தனமும்கூட. ‘இளசாக‘ என்றால், சரியாக எந்த வயதிலிருந்து? ‘சிசுப் பருவத்திலிருந்தே’ என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல். இளம் தீமோத்தேயுவின் விஷயத்தில் இதுதான் நடந்தது. அவரது தாய் ஐனிக்கேயாளும், பாட்டி லோவிசாளும் ‘பரிசுத்த வேதவாக்கியங்களை’ அவருக்கு போதித்ததால் அவர் அவற்றைக் ‘கற்று நிச்சயித்துக்கொண்டார்.’ அதன் விளைவென்ன? அவர் ‘இரட்சிப்பிற்கேற்ற ஞானமுள்ளவராவதில்’ அது பெரும் பங்குவகித்தது.—2 தீமோத்தேயு 1:5, NW; 3:14, 15.
அதேவிதமாய் இன்று, ‘நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாத’ பெற்றோர், எச்சந்தர்ப்பத்திலும் “தளர்ந்துபோகாதிருந்தால்” பெரும் பலன்களைப் பெறுவார்கள். (கலாத்தியர் 6:9) ஞானமுள்ள அரசர் சாலொமோன் சொன்ன விதமாய், “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்.”—நீதிமொழிகள் 23:24.