‘லீபனோனின் கேதுருவைப்போல உயர்ந்தோங்குதல்’
லீபனோனின் வனப்புமிக்க மலைகள். அங்கு வளர்கின்றன ஆர்ஸ் ஆர்-ராப் மரங்கள். “ஆண்டவரின் கேதுருக்கள்” என்பதே அதற்கு அர்த்தம். எப்போதும் பச்சைப்பசேலென்று இருக்கும் இந்தக் கம்பீரமான மரங்கள் ஒருசமயம் இம்மலைகளையே குத்தகைக்கு எடுத்தது போல் காட்சியளித்தன. பைபிளைப் புரட்டினால் சுமார் 70 தடவை இம்மரத்தின் பெயரைப் பார்க்கலாம். வேறெந்த மரத்தைப் பற்றியும் அது இந்தளவு குறிப்பிடுவதில்லை.
லீபனோனின் இந்த வாட்டசாட்டமான கேதுருக்களை பைபிள், ‘சிறப்பான,’ ‘கம்பீரமான’ மரங்களென வர்ணிக்கிறது. (உன்னதப்பாட்டு 5:15; எசேக்கியேல் 17:23, NW) கேதுருக்கள் அவற்றின் பருமனுக்கும் நீடித்த உழைப்பிற்கும் பிரசித்தி பெற்றவை. ஆகவே அவற்றின் மரக்கட்டைகள் வீடுகளையும் கப்பல்களையும் மரச் சாமான்களையும் உருவாக்க ஆண்டாண்டு காலமாக கைகொடுத்து உதவியிருக்கின்றன. அவற்றின் மணமும் தகதகவென எரியும் தணலின் நிறமும் நம் மூக்குக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கின்றன. அவை உளுத்துப்போகாமல் இருப்பதன் இரகசியம், அவற்றில் அதிகளவிலுள்ள பிசின்தான். பூச்சிகள் இவற்றை சீந்தாமலிருப்பதற்குக் காரணமும் இந்தப் பிசின்தான். வானளாவ உயர்ந்தோங்கி பிரமாண்டமாய் நிற்கும் இவை, அணைக்க நினைக்கும் கரங்களுக்குள் அடங்காதவை. ஏனென்றால் அவற்றின் சுற்றளவு 12 மீட்டர், உயரமோ 37 மீட்டர். வெகு ஆழம்வரை உறுதியான வேர்களை ஓடவிட்டு ஸ்திரமாக நிற்கின்றன. “தாவர உலகின் முடிசூடா மன்னர்கள்” என வனக் காவலர்கள் சிலர் அவற்றை அழைப்பதில் ஆச்சரியமே இல்லை!
பைபிள் எழுத்தாளரான எசேக்கியேல், கடவுள் நடுவதற்கிருந்த கேதுருவின் நுனிக்கிளையென மேசியாவைப் பற்றி தீர்க்கதரிசனம் சொன்னார். (எசேக்கியேல் 17:22) “கேதுரு” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு “உறுதியாயிருத்தல்” என அர்த்தம். மேசியாவான இயேசு கிறிஸ்துவை இன்று பின்பற்றுபவர்கள், திடகாத்திரமாய் நெடுநெடுவென இருக்கும் கேதுருவைப்போல் “விசுவாசத்தில் உறுதியாய் நிற்கவேண்டும், . . . பலம்பொருந்தியவர்களாய் வளரவேண்டும்.” (1 கொரிந்தியர் 16:13, NW) இது எப்படி முடியும்? கிறிஸ்தவர்களுக்கு ஒத்துவராத பழக்கவழக்கங்களை உறுதியாய் எதிர்த்து, உத்தமத்திலும் தேவபக்தியிலும் எப்போதும் நிலைத்திருப்பதன் மூலமே. அப்படிச் செய்பவரை பைபிள் “லீபனோனின் கேதுருவைப்போல உயர்ந்தோங்கி வளரும் . . . நீதிமான்” என விவரிக்கிறது.—சங்கீதம் 92:12, த நியூ இங்லிஷ் பைபிள்.