உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 11/15 பக். 28
  • பதவியை விலைபேசுவோரே, ஜாக்கிரதை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பதவியை விலைபேசுவோரே, ஜாக்கிரதை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 11/15 பக். 28

பதவியை விலைபேசுவோரே, ஜாக்கிரதை!

சமாரியாவைச் சேர்ந்த சீமோன் அவருடைய சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குள்ளவர். அவர் பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்துவந்தார். மாயவித்தை செய்து ஜனங்களை பிரமிக்கப்பண்ணினபடியால் அவர்கள் அவரைக் குறித்து, “தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான்” என்று சொல்வதுண்டு.—அப்போஸ்தலர் 8:9-11.

ஆனால் சீமோன் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவரான பின்பு, தனக்கிருந்த சக்தியைவிட பெரிதான ஒரு சக்தி இருப்பதை உணர்ந்துகொண்டார். அது இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கு அருளப்பட்டிருந்த ஒரு சக்தி; அது பரிசுத்த ஆவியின் அற்புதமான வரங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது. தானும் அந்த அதிகாரத்தைப் பெற விரும்பியதால் சீமோன் அப்போஸ்தலர்களுக்கு பணம்கொடுத்து அவர்களிடம் இவ்வாறு கேட்டுக்கொண்டார்: “நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும்.”—அப்போஸ்தலர் 8:13-19.

அப்போது அப்போஸ்தலனாகிய பேதுரு, சீமோனை இவ்வாறு கடிந்துகொண்டார்: “தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.”—அப்போஸ்தலர் 8:20, 21.

இந்தப் பைபிள் பதிவிலிருந்துதானே “சைமனி” என்ற வார்த்தை வந்தது, இதற்கு “பதவிகளை அல்லது பதவி உயர்வுகளை பணம்கொடுத்து வாங்கும் அல்லது விற்கும் பாவச்செயல்” என்ற விளக்கம் தரப்படுகிறது. விசேஷமாக 9 முதல் 11 நூற்றாண்டுகள் வரையாக பணம்கொடுத்து பதவியை வாங்கும் பழக்கம் “துறவிமடங்களிலும், திருச்சபை குருமார் தொகுதியிலும், மேற்றிராசனத்திலும், போப்பாதிக்கத்திலும்கூட எங்கும் பரவியிருந்தது” என்பதாக நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா ஒப்புக்கொள்கிறது. தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவின் (1878) ஒன்பதாவது பதிப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது: “போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் கார்டினல்களுடைய குழுவின் வரலாற்றினை ஆய்வுசெய்கையில், பணம் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் ஒரு சர்ச் தேர்தல்கூட நடந்ததே கிடையாது என்பது ஆய்வுசெய்வோருக்கு தெரியவருகிறது, பெரும்பாலும் இந்தத் தேர்தல் குழுவில் இருந்தவர்களின் கொடுக்கல் வாங்கல் படுமோசமாகவும் வெட்கக்கேடான முறையிலும் மிகவும் பகிரங்கமாகவும் தெரிந்தது.”

உண்மைக் கிறிஸ்தவர்கள் இன்று பணம் கொடுத்து பதவி வாங்குவதைக் குறித்து ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உதாரணமாக, சிலர் தங்களுக்கு கூடுதலான சிலாக்கியங்களைக் கொடுக்க அதிகாரம் பெற்றிருப்பவர்களை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசவோ அல்லது அவர்களுக்குத் தாராளமாக பரிசுகளை வாரி வழங்கவோ செய்யலாம். மறுபட்சத்தில், இப்படிப்பட்ட சிலாக்கியங்களைக் கொடுக்க அதிகாரம் பெற்றிருப்பவர்கள், தங்களுக்கு பரிசுகளை வாரி வழங்க வசதி படைத்தவர்களாயும் அப்படிச் செய்ய ஆவலுள்ளவர்களாயும் இருப்பவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்ளலாம். இரண்டுமே கொடுக்கல் வாங்கலை உட்படுத்துகிறது, வேதாகமம் இப்படிப்பட்ட போக்கை வெளிப்படையாக கண்டிக்கிறது. பேதுரு இவ்வாறு சீமோனைத் தூண்டினார்: “ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் [“உன்னுடைய இந்தத் தந்திரம்,” நியூ ஜெருசலம் பைபிள்] உனக்கு மன்னிக்கப்படலாம். நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன்.”—அப்போஸ்தலர் 8:22, 23.

மகிழ்ச்சிகரமாக, சீமோன் தன்னுடைய ஆசை எந்தளவு மோசமானது என்பதை உணர்ந்துகொண்டான். அவன் அப்போஸ்தலர்களிடம், “நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காக கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்று மன்றாடினான். (அப்போஸ்தலர் 8:24) இந்தப் பதிவிலுள்ள முக்கியமான பாடத்தை கவனத்தில் வைத்து உண்மைக் கிறிஸ்தவர்கள் கொடுக்கல் வாங்கலினால் கறைப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்