“கத்தோலிக்கராயிருக்கிற நாம அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்”
இத்தாலியிலுள்ள பாரியில், உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர் மத வரலாற்றைப் பற்றி பாடம் நடத்துகையில், யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து மேற்காணும் கருத்தைத் தெரிவித்தார். பாடத்திட்டத்தில் வீடியோ காஸட்டுகளையும் பயன்படுத்தப் போவதாக அவர் தன் வகுப்பில் குறிப்பிட்டிருந்தார். இதைக் கேட்ட 18 வயது மாணவன் ரோபேர்டோ, கலந்துரையாடலில் தன்னுடைய மதத்தையும் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டான். யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்கு பின்னுள்ள அமைப்பு என்ற வீடியோ டேப்பைக் கொடுத்தான். ரோபேர்டோ கொடுத்த காஸட்டை வாங்கி ஆசிரியை போட்டுக் காட்டினார்; வகுப்பிலிருந்த எல்லாருமே, கிட்டத்தட்ட 30 மாணவர்களுமே அந்த வீடியோவைப் பார்த்தனர். “யெகோவாவின் சாட்சிகளுக்கு இடையில இருக்கிற ஒற்றுமை, ஒழுங்கமைப்பு, நெகிழ வைக்கிற அன்பு இதையெல்லாம் பார்த்து எல்லாரும் அசந்துட்டாங்க. ஒவ்வொரு மாசமும் 4 கோடி காவற்கோபுரமும் 3.6 கோடி விழித்தெழு!-வும் அச்சாகிறது தெரிஞ்சவுடனே எல்லாருமே மூக்குமேலே விரலை வெச்சுட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன்” என ரோபேர்டோ சொல்கிறான்.
வீடியோவைப் பார்த்தபிறகு, “நீங்க இந்தளவுக்கு ஆர்டரா எல்லாத்தையும் செய்வீங்கன்னு நான் நினைச்சுகூட பார்க்கல” என ரோபேர்டோவுடன் படிக்கும் மாணவர்களில் அநேகர் கூறினர். யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து, ஆசிரியை வகுப்பில் இவ்வாறு சொன்னார்: “அவங்களோட விசுவாசம்தான் இவ்வளவு ஒத்துமையாவும் ஒழுங்காவும் இருக்கிறதுக்கு தூண்டுது என்பத கவனிங்க. கத்தோலிக்கராயிருக்கிற நாம அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.” அந்த வீடியோ காட்சியும் அதைத் தொடர்ந்த கலந்துரையாடலும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி விரிவாக புரிந்துகொள்ள துணை புரிந்தது.