நவீன கிரேக்கில் புதிய பைபிள்
கிரீஸில் நடைபெற்ற “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாட்டில் கூடியிருந்தவர்களுக்கு ஆகஸ்ட் 23, 1997 மறக்க முடியாத நாள். அன்றைய மதிய நிகழ்ச்சியின் முடிவில், ஒரு புதிய பைபிள் வெளியிடப்பட்டது. அதுவே நவீன கிரேக்கில் பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு. வியப்பு மேலிட நின்ற பார்வையாளர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. அலையாய் எழுந்த கைதட்டல் ஓய சில நிமிடம் ஆனது!
1905-ம் வருடம் முதற்கொண்டு, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவரால் தயாரிக்கப்பட்ட 19-ம் நூற்றாண்டைய மொழிபெயர்ப்பு பைபிளை யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த பைபிள் பல வருடங்களாக அவர்களுக்கு மிகவும் பயனளித்தது. சில காலங்களாகவே, அதிக திருத்தமானதும், புரிந்துகொள்ள எளிதானதுமான ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு தங்களுக்கு தேவை என யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்தனர். 1993-ல் கிரேக்க மொழியில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பை அவர்கள் ஆனந்தமாகப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இப்போதோ, முழு பைபிளையும் நவீன கிரேக்கில் பெற்ற போது பேரானந்தம் அடைந்தனர்.
சாட்சி ஒருவர் புதிய உலக மொழிபெயர்ப்புக்கு பாராட்டைத் தெரிவிக்கும் தொனியில், “இது ஒரு கவிதை, யெகோவாவின் குரல் தவழ்ந்து வரும் தென்றல் காற்று, இதை முதல் தடவையாக, எங்களுடைய சொந்த மொழியிலேயே தெளிவாக புரிந்துகொள்ளப் போகிறோம்” என்று கூறினார். சிலர் வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக தங்களுடைய புதிய பைபிளைப் படிக்க ஆரம்பித்து விட்டனர். மாநாட்டுக்கு வந்திருந்த ஒருவர் அதிக உற்சாகத்தால் அதிகாலை ஒரு மணிவரை தன்னுடைய பைபிளை வாசித்துக் கொண்டிருந்தார். யோபு புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்திருந்தார்!
கிரேக்கில் பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு வெளிவருவதற்காக ஏழு வருடங்கள் பாடுபட்டு உழைத்தனர். “யெகோவா தேவனைப் பற்றி நல்ல ஆட்களுக்கு கற்றுக் கொடுக்க இந்தப் புதிய உலக மொழிபெயர்ப்பு பெருமளவில் உதவி செய்யும் என்பது உறுதி” என்ற வார்த்தைகளைத் தாங்கிய கடிதம் வந்தது.