“உங்களிடம் உள்ளதை விட்டுவிடாதீர்கள்”
கிரீஸைச் சேர்ந்த 30 குட்டித்தீவுகள் சைக்லடெஸ் தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தீவுகள் ஒன்றில் சாட்சிகள் பிரசங்கித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் ஒரு தெருவில் வீடுவீடாகச் சென்று பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அவர்களைக் கண்ட ஒரு போலீஸ்காரர் தன்னோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு சொன்னார். அவர்கள் அங்குச் சென்ற சிறிது நேரத்திற்குள்ளாகவே போன் ரீங்காரமிட்டது. போனில் அழைத்தவர் அந்தக் கிராமப் பாதிரி. “யெகோவாவின் சாட்சிகள் கிராமத்திற்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டேனே” என்றார் அவர். “ஆமாம், இரண்டுபேரைக் கூடவே இங்கு அழைத்து வந்திருக்கிறேன்” என்று போலீஸ்காரர் பதிலளித்தார். “நான் உடனே வருகிறேன்” என்றார் பாதிரி. இவ்வாறு தொலைபேசியில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதைக் கேட்ட சகோதரர்களுக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது.
அந்தப் பாதிரி அங்கு வந்துசேர்ந்தார். அவர் புன்னகை பூத்த முகத்தோடு அவர்களுடன் கைகுலுக்கினார். போலீஸ்காரருக்கு அடுத்திருந்த இருக்கையில் அவர் அமர்ந்தார். பேச்சு வார்த்தையின்போது போலீஸ்காரர் வாக்குவாத தொனியில் பேசினார். பாதிரியோ நியாயமாயும் நிதானமாயும் பதிலளித்தார். சாட்சிகளை லேசாக நினைத்துவிட வேண்டாம் என்று அவர் போலீஸ்காரரிடம் கூறி இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் அவர்கள் பதிலளிப்பார்கள். ஏனென்றால் அதற்கான பயிற்றுவிப்பை அவர்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பெறுகிறார்கள். இந்தப் பூமியின் அஸ்திவாரத்தையேகூட சுலபமாய் அசைத்துவிடலாம்; ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரின் விசுவாசத்தைக்கூட அசைக்க முடியாது.”
அதற்கு அடுத்தநாள் காலை அச்சகோதரர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது அதே பாதிரி மறுபடியும் அவர்களுக்கு எதிர்ப்பட்டார். அப்போது, “நேற்று போலீஸ் ஸ்டேஷனில் பேசிக்கொண்டிருந்தபோது எங்களுடன் ரொம்ப சிநேகபான்மையாக பேசினீர்களே, அதற்கு என்ன காரணம்?” என்று சகோதரர்கள் கேட்டனர். அதற்கு அந்தப் பாதிரி, தான் சைரஸில் இருக்கும்போது யெகோவாவின் சாட்சிகளோடு பழக்கப்பட்டிருப்பதாகவும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வருடக்கணக்கில் வாசித்திருப்பதாகவும் சொன்னார். சர்ச்சில் பிரசங்கிக்கும்போது பலமுறை காவற்கோபுரத்தை அவருடைய ஃபோல்டருக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு அதிலிருக்கும் குறிப்புகளையே எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவர் இவ்விதம் சொன்னார்: “உங்களுடைய பிரசுரங்கள் மாத்திரம் எனக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் உண்மையில் நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம். அவைதாம் எனக்கு நம்பிக்கை அளிக்கின்றன.”
பிறகு பாதிரி சாட்சிகளிடம் இவ்வாறு சொன்னார்: “நான் ஒன்று சொல்லட்டுமா! உங்களிடம் உள்ளதை விட்டுவிடாதீர்கள். அதை விட்டுவிடும் பெரிய தவறைச் செய்துவிடாதீர்கள். இப்போது உங்களிடம் சொல்வதுதான் நான் இதுவரை கொடுத்ததிலேயே சிறந்த பிரசங்கம். இவை என் உதட்டளவில் அல்ல, என் இருதயத்திலிருந்து வருகின்றன.”