ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
யெகோவாவின் வழிகளுக்கு மனத்தாழ்மையோடு கீழ்ப்படிதல்
“தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே . . . [யெகோவாவைத்] தேடுங்கள்.” எபிரெய தீர்க்கதரிசியாகிய செப்பனியா மூலம் 26 நூற்றாண்டுகளுக்கும் முன்பு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, இன்றும் பூமி முழுவதிலும் உள்ளவர்களுக்கு விடுக்கப்படுகிறது. (செப்பனியா 2:3, தி.மொ.) யெகோவாவைத் தேடுவது என்றால் என்ன? ஒரே உண்மையுள்ள, உயிருள்ள கடவுளாகிய யெகோவாவைப் பற்றிய அறிவைப் பெறுவதோடு இது ஆரம்பமாகிறது.—எரேமியா 10:10; யோவான் 17:3.
ஆனாலும், அறிவைப் பெறுவது மட்டுமே கடவுளோடு ஒரு நல்ல நிலைநிற்கைக்கு வழிநடத்தாது. ஒருவர் கடவுளுடைய தயவைப் பெறவேண்டுமானால் தான் பெற்ற அறிவைப் பொருத்த வேண்டும். எப்படி? கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக தன் சிந்தனையையும் நடத்தையையும் மனத்தாழ்மையோடு மாற்றிக்கொள்வதன் மூலமே. சூரினாமிலிருந்து வரும் பின்வரும் அனுபவம் இதையே காண்பிக்கிறது.—எபேசியர் 4:22-24.
எடி என்பவர் மத்திப 30 வயதுகளில் இருந்த பள்ளி ஆசிரியர். ‘இன்றைய சமுதாயத்தில் மதத்தின் பங்கு என்ன? பழங்கால புத்தகமாகிய பைபிள் நவீன அறிவியலோடு ஒத்திருக்கிறதா?’ போன்ற கேள்விகளுக்கான திருப்தியளிக்கும் பதில்களை அவர் தேடிக்கொண்டிருந்தார். யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்து, இந்தக் கேள்விகளுக்கு பைபிள் அடிப்படையிலான பதில்களைக் கொடுத்தபோது எடி கவனமாக கேட்டார். சாட்சிகளின் விளக்கங்களை சரிபார்ப்பதற்காக அவர் குறிப்புகளையும்கூட எடுத்துக்கொண்டார்.
இதற்கு முன்பு எடி, கடவுளுடைய உதவியால்தான் குரங்கு பரிணமித்து மனிதனாய் உருவானது என்று போதித்த மதத்தோடு தொடர்பு வைத்திருந்தார். ஆகவே, உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற ஆங்கில புத்தகத்தை சாட்சிகள் அளித்தபோது அவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். பைபிளின் சிருஷ்டிப்பு விவரத்தை அந்தப் புத்தகம் தெளிவாக விளக்கிய விதம் அவரைக் கவர்ந்தது. அவருடைய பைபிள் படிப்பு மூலம் சத்தியத்தைக் கண்டுபிடித்து விட்டதாக அவர் உணர்ந்தார்!
ஆனால் இப்போது ஒரு சோதனையை எதிர்ப்பட்டார். எடி வாழ்ந்துவந்த வீட்டில் திருட்டும் ஏமாற்றுவேலையும் சர்வசாதாரணமாக இருந்தன. ஆகவே, தன் ரூமில் இருந்தவர்களோடு சேர்ந்து சீரழிந்த வாழ்க்கை வாழ்வதா அல்லது கடவுளை மகிமைப்படுத்தும் வாழ்க்கைக்காக இந்த நடத்தையை விட்டுவிடுவதா என்பதை தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. விவேகத்தோடு எடி இரண்டாவது தெரிவையே செய்தார். கெட்ட கூட்டுறவை நிறுத்திவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.—1 கொரிந்தியர் 15:33, 34.
ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டங்களுக்கு வர ஆரம்பித்த பிறகு எடி வேகமாக முன்னேறினார். நடை உடை பாவனையிலும்கூட முன்னேற்றம் செய்தார். தான் கற்றுக்கொண்டிருந்ததைப் பற்றி தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேச ஆரம்பித்தார். பின்னர், “நற்செய்தியை” வீடுவீடாக பிரசங்கிக்க தகுதி பெற்றபோது அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. (மத்தேயு 24:14, NW; அப்போஸ்தலர் 20:20) டிசம்பர் 1996-ல் அவர் நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்தது. யெகோவாவுக்கான தன் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினார்.
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர், “யெகோவாவைத் தேடுங்கள்” என்ற அழைப்புக்கு இசைவாக செயல்படுகின்றனர். அவ்வாறு செய்கையில் நீதிமொழிகள் 22:4 எவ்வளவு உண்மை என்பதை உணருகிறார்கள்: “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.” ஆம், யெகோவாவின் வழிகளுக்கு மனத்தாழ்மையோடு கீழ்ப்படிவதன் மூலம் சத்தியத்தை நேசிப்போர் அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை இப்பொழுது அனுபவிக்கிறார்கள். மேலும், இதே பூமியில் நித்திய ஆசீர்வாதங்களையும் நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்.—சங்கீதம் 37:29.
[பக்கம் 18-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கரிபியன் கடல்
சூரினாம்
கயானா
பிரெஞ்சு கயானா
பிரேஸில்
[படத்திற்கான நன்றி]
பூமி: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.