உங்கள் வார்த்தை சவுக்கடியா சஞ்சீவியா?
துன்பம் நிறைந்திருக்கும் இந்தக் காலங்களில், அநேகர் ‘உள்ளம் உடைந்து,’ ‘நைந்த நெஞ்சினராய்’ இருப்பதில் வியப்பேதும் இல்லை. (சங்கீதம் [திருப்பாடல்கள்] 34:18, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே எப்போதும் ‘திடனற்றவர்களைத் தேற்றவும் பலவீனரைத் தாங்கவும்’ வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அப்போஸ்தலனாகிய பவுல். (1 தெசலோனிக்கேயர் 5:14) ஆனால் ஒருவர் நம்மைப் புண்படுத்திவிட்டார் அல்லது நமக்கு விரோதமாய் பாவம் செய்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளலாம், அப்போது என்ன செய்வது? அச்சந்தர்ப்பத்தில், அவரைப் பார்த்து நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டு புத்தி சொல்வதில் தப்பில்லை என நாம் நினைக்கலாம். ஆனால் உஷார்! நல்ல பயனுள்ள புத்திமதியைக்கூட, தேள் கொட்டுவதுபோல் சொன்னால் தீமைதான் விளையும். நீதிமொழிகள் 12:18 (பொ.மொ.) சொல்கிறது: “சிந்தனையற்ற பேச்சு வாள்போலப் புண்படுத்தும்.”
ஆகவே புத்திசொல்லவோ மனஸ்தாபத்தைத் தீர்த்துக்கொள்ளவோ நாம் புறப்படும்போது, அதே நீதிமொழிகள் 12:18-ன் இரண்டாவது பாகத்தை நினைவில் வைக்கவேண்டும்; அதாவது, ‘ஞானிகளின் சொற்கள் புண்களை ஆற்றும்.’ எப்போதும் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் தப்பு செய்துவிட்டால், என்னை எப்படி திருத்தவேண்டுமென்று நினைப்பேன்?’ கிட்டத்தட்ட அனைவருமே, நம்முடைய குறைகளை அல்ல, ஆனால் நிறைகளையே காதுகுளிர கேட்க விரும்புகிறோம். ஆகவே வாய்நிறைய பாராட்டுங்கள். தப்புசெய்தவர் முன்னேறுவதற்கு அது பெரும்பாலும் தூண்டுகோலாய் அமையும்; அதற்காக தரப்படும் உதவியையும் அவர் போற்றுவார்.
எப்போதுமே சாந்தமாக பேசுவது எவ்வளவு அவசியம்! இதமான வார்த்தைகளைக் கேட்போர், சங்கீதக்காரன் உணர்ந்த விதமாகவே உணருவர்; அவர் எழுதினார்: “நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை [மறுப்பதில்லை].”—சங்கீதம் 141:5.