“கடவுள் காட்டும் ஜீவ வழி” —1998-1999 மாவட்ட மாநாடு அண்மையில்!
இந்தியா, நேப்பாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் 19 மாநாடுகள் நடத்துவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளன. பெரும்பாலும், இந்த மூன்று-நாள் கூட்டங்களில் ஒன்று—அதாவது, வெள்ளி முதல் ஞாயிறு வரை நடைபெறும் கூட்டங்களில் ஒன்று—உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு நகரில் இருக்கும். பெரும்பாலான இடங்களில், நிகழ்ச்சிநிரல் ஒவ்வொரு நாளும் காலை 9:30 மணிக்கு இசையுடன் ஆரம்பமாகும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலை முன்னேறி வருவதைப் பற்றிய அறிக்கைகளை வெள்ளிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் சிறப்பித்துக் காட்டும். “கிறிஸ்துவின் மீட்கும்பொருள்—இரட்சிப்புக்கான கடவுளின் வழி” என்ற முக்கிய பேச்சின் மூலம் மாநாட்டின் பொருள் வலியுறுத்திக் காண்பிக்கப்படும்.
பிற்பகலில், “பெற்றோரே—உங்கள் பிள்ளைகளின் மனதில் கடவுளின் வழியை பதிய வையுங்கள்” என்ற தொடர்பேச்சு கொடுக்கப்படும். யெகோவாவை நேசித்து சேவை செய்வதற்கு எவ்வாறு இளம் நபர்களை உந்துவிப்பது என்பதைப் பற்றிய ஆலோசனைகளை அந்தப் பேச்சு அளிக்கும். பிற்பகல் நிகழ்ச்சிநிரல், “மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?” என்ற பேச்சுடன் முடிவடையும்.
சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல், யெகோவாவின் சாட்சிகளுடைய சீஷராக்கும் வேலையைப் பற்றி அடுத்தடுத்து மூன்று பகுதிகளாக கொடுக்கப்படும் பின்வரும் பேச்சுக்களை சிறப்பித்துக் காட்டும்: “ஜீவனுக்கான வழியில் செல்ல மக்களுக்கு உதவுதல்,” “மக்களை சென்றெட்டும் சவால்,” “கிறிஸ்து கட்டளையிட்ட அனைத்தையும் சீஷர்களுக்கு கற்பித்தல்.” காலை நிகழ்ச்சிநிரலின் முடிவில், புதிய சீஷர்கள் முழுக்காட்டப்படுவதற்கு ஏற்பாடு இருக்கும்.
சனிக்கிழமை பிற்பகலில், “முடிவில்லா வாழ்க்கை எனும் எதிர்பார்ப்போடு சேவித்தல்” என்ற பேச்சு முதலில் கொடுக்கப்படும். இது கடவுளைச் சேவிப்பதற்கான நம்முடைய தனிப்பட்ட காரணங்களுக்கு ஜெபசிந்தையுடன் கவனம் செலுத்தும்படி நம்மை உற்சாகப்படுத்தும். “கடவுளின் வழியை போதிக்கும் ‘மனித வடிவிலான வரங்களை’ போற்றுதல்,” “ஆளுமை—பழையதை களைந்து புதியதை தரித்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சுகள், எபேசியர் 4-ஆம் அதிகாரத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறிவொளியூட்டும். அடுத்து, “உலகத்தால் கறைபடாதபடி உங்களை காத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சிலும் “இளைஞரே—கடவுளின் வழியைப் பின்பற்றுங்கள்” என்ற மூன்று-பாக தொடர்பேச்சிலும் மிகச் சிறந்த பைபிள் புத்திமதி அளிக்கப்படும். “சிருஷ்டிகர்—அவருடைய ஆளுமையும் வழிகளும்” என்ற பேச்சுடன் பிற்பகல் நிகழ்ச்சிநிரல் முடிவுக்கு வரும்.
ஞாயிறு காலை நிகழ்ச்சிநிரலில் மூன்று-பாக தொடர்பேச்சு விசேஷ அம்சமாக இருக்கும், அது பைபிள் புத்தகமாகிய எசேக்கியேலின் கடைசி அதிகாரங்களையும் அவற்றின் தீர்க்கதரிசன பொருத்தத்தையும் கலந்தாலோசிக்கும். மூன்று எபிரெய இளைஞரின் உண்மைத்தன்மையை அடிப்படையாக வைத்து நாடக உடையில் நடித்துக்காட்டப்படும் நாடகத்தோடு காலை நிகழ்ச்சிநிரல் முடிவுக்கு வரும். பிற்பகலில், “நித்திய ஜீவனுக்கான ஒரே வழி” என்ற பொதுப் பேச்சு மாநாட்டின் சிறப்பு அம்சமாக இருக்கும்.
நீங்கள் மூன்று நாட்களும் ஆஜராயிருப்பதன் மூலம் நிச்சயமாகவே ஆவிக்குரிய பிரகாரமாய் செழிப்படைவீர்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் வரும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சிநிரலுக்கான கட்டணம் எதுவும் உங்களிடமிருந்து வசூலிக்கப்படாது. உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள விலாசத்தைத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்தோடு தொடர்புகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.