அவர்களோடு ஏன் கலந்துகொள்ளக் கூடாது?
ஜௌக்குவா யுலிம்பாவுக்கு 73 வயதாகிறது, அவர் கடந்த வருடம் சுமார் 450 கிலோமீட்டர் வரை பயணம் செய்தார். அவர் அத்தனை தூரமும் நடந்தே சென்றார், அதற்கு 16 நாட்கள் எடுத்தன.
இந்த வயதான மனிதர், யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்கென இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டார். மாநாடு முடிந்த பின்பு, மிகவும் மகிழ்ச்சியடைந்தவராய் ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தப்பட்டு மறுபடியும் 16 நாட்கள் பயணத்தை வீட்டை நோக்கி மேற்கொண்டார். அவர் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? நிச்சயமாகவே கிடைத்தது! நிஜௌக்குவா யுலிம்பா பல வருடங்களாகவே இந்தப் பயணத்தை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்கிறார்.
கடந்த வருடம் 230-க்கும் மேற்பட்ட தேசங்களிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளுக்கு வந்த 15 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களில் இந்த ஆப்பிரிக்க மனிதரும் ஒருவர். ஆனால் பெரும்பாலான நபர்கள் மாநாடு நடந்த இடத்திற்கு நாட்கணக்கில் நடந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பெரும்பாலான நபர்கள் கார், பஸ், இரயில் அல்லது விமானம் ஆகியவற்றில் வந்து சேர்ந்தனர். அவர்களில் நீங்களும் ஒருவரா?
மாநாடுகள் 1998-ல் மறுபடியும் உலகமுழுவதும் பெரும்பாலும் கோடை மாதங்களில் (அல்லது மழையில்லாத காலப்பகுதியில்) நடத்தப்படும். உடல்நலம் அனுமதித்தால், நிஜௌக்குவா யுலிம்பா அதேபோல் நீண்டதூரம் நடந்து சென்று ஆஜராவார். அவரும் கோடிக்கணக்கான மற்றவர்களும் நடைமுறையான, விசுவாசத்தை பலப்படுத்தும், ஊக்கமூட்டும் நிகழ்ச்சிநிரலை கேட்பர். இந்த மாநாடு, ஆஜராகும் அனைவருக்கும் இந்த வருடத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும். நீங்களும்கூட அதற்கு வரும்படி அன்பாக அழைக்கப்படுகிறீர்கள். உங்களுக்கு அருகிலுள்ள மாநாடு நடக்கும் இடத்தை உங்கள் பிராந்தியத்தில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு சொல்வதில் சந்தோஷப்படுவர்.