அவர்கள் ஏன் அதை செய்கிறார்கள்?
ஒவ்வொரு வருடமும் உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மாநாடுகளில் ஒன்றுகூடி வருகின்றனர். அங்கே அவர்கள் நல்ல தோழமையை அனுபவிக்கின்றனர், பைபிள் போதனைகள் அடங்கிய மிகச்சிறந்த நிகழ்ச்சிநிரலை கேட்கின்றனர். சிலர் இந்த மாநாடுகளுக்கு ஆஜராவதற்கென பெரும் முயற்சிகள் செய்கின்றனர். உதாரணமாக, கடந்த வருடம், மலாவியில், அறுபதுகளின் மத்திபத்தில் இருந்த ஒரு தம்பதியினர் மாநாட்டுக்கு ஆஜராவதற்கென தங்கள் மகனோடும் மருமகளோடும் குழந்தையோடும் சேர்ந்து சைக்கிளில் 80 கிலோமீட்டர் பயணம் செய்தனர். அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு காலை ஆறு மணிக்கு புறப்பட்டு 15 மணிநேரம் கழித்து மாநாடு நடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்தனர்.
மொஸாம்பிக்கில், ஒரு மாநாட்டிற்கு செல்வதற்கென ஒரு தொகுதியினர் சைக்கிளில் மூன்று நாட்கள் பயணம் செய்தனர். ஓர் இரவு அவர்கள் திறந்தவெளியில் தங்கியிருந்தபோது, அருகில் சிங்கங்கள் கர்ஜிக்கிறதை கேட்டனர். அவற்றை விரட்டுவதற்காக விறகு கட்டைகளை தூக்கி எறிந்தபோதிலும், விடியற்காலை வரை அந்தச் சிங்கங்கள் அங்கேயே இருந்தன. அதே மாநாட்டுக்கு பயணம் செய்துகொண்டிருந்த மற்றொரு சாட்சி சாலையில் ஒரு சிங்கத்தை நேருக்கு நேர் எதிர்ப்பட்டார். அந்தச் சிங்கம் அங்கிருந்து செல்லும்வரை அவர் அங்கேயே ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தார். தாங்கள் எவ்வாறு ‘சிங்கத்தின் வாயிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்’ என்பதைப் பற்றி மாநாட்டில் இந்தச் சாட்சிகள் சந்தோஷமாக கூறினார்கள்.—2 தீமோத்தேயு 4:17.
யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் மாநாடுகளுக்கு ஆஜராவதற்கென அல்லது வணக்கத்திற்கென்று வாராந்தர சபைக்கூட்டங்களுக்கு செல்வதற்கும்கூட பெரும் முயற்சிகள் செய்கின்றனர். ஏன்? அவ்வாறு ஒன்றுகூடி வருவது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள பின்வரும் கட்டுரைகள் உங்களுக்கு உதவிசெய்யும்.