“இதுதான் உள்ளதிலேயே சிறந்த இண்டர்லினியர் புதிய ஏற்பாடு”
இவ்வாறுதான் த கிங்டம் இண்டர்லினியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த கிரீக் ஸ்கிரிப்ச்சர்ஸ்-ஐ (கிரேக்க வேதாகமத்தின் ராஜ்ய வரிக்குவரி மொழிபெயர்ப்பு) டாக்டர் ஜேசன் பேடூன் விவரிக்கிறார். அவர் இவ்வாறு விளக்குகிறார்:
“ப்ளூமிங்டனிலுள்ள [அ.ஐ.மா.] இண்டியானா பல்கலைக்கழகத்தின் இறைமையியல் ஆய்வுத் துறையில் சமீபத்தில்தான் நான் ஒரு கோர்ஸை நடத்தி முடித்தேன் . . . இது பிரதானமாக சுவிசேஷங்களைப் பற்றிய கோர்ஸாக இருந்தது. த கிங்டம் இண்டர்லினியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த கிரீக் ஸ்கிரிப்ச்சர்ஸ்-ன் வடிவில் உங்களுடைய உதவி எனக்கு கிடைத்தது. இதை என்னுடைய மாணவர்கள் பாடபுத்தகங்களில் ஒன்றாக பயன்படுத்தினார்கள். இந்தச் சிறிய புத்தகங்கள் கோர்ஸில் பெருமதிப்புள்ளவையாக இருந்தன; அதோடு என் மாணவர்களின் மத்தியிலும் மிகவும் பிரபலமாகிவிட்டன.”
டாக்டர் பேடூன் கிங்டம் இண்டர்லினியர் மொழிபெயர்ப்பை ஏன் தன்னுடைய காலேஜ் கோர்ஸில் பயன்படுத்துகிறார்? அவர் இவ்வாறு பதிலளிக்கிறார்: “நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் இதுதான் உள்ளதிலேயே சிறந்த இண்டர்லினியர் புதிய ஏற்பாடு. நான் பைபிளில் மிகவும் தேர்ச்சிபெற்றவன்; நவீன பைபிள் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிற பாடத்தொகுப்புகளையும் கருவிகளையும் எனக்கு மிக நன்றாகத் தெரியும்; நான் யெகோவாவின் சாட்சியாகவும் இல்லைதான். ஆனால், நல்ல தரம்வாய்ந்த புத்தகத்தை பார்த்த மாத்திரத்தில் சொல்லி விடுவேன். உங்களுடைய ‘புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவினர்’ அபாரமாக செய்திருக்கிறார்கள். உங்களுடைய இண்டர்லினியர் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகவும் திருத்தமாக இருக்கிறது; அதோடு அதை வாசிப்பவர்கள் கிரேக்க மொழி பேசுகிற உலகிற்கும் நமக்கும் இடையே உள்ள மொழி, கலாச்சாரம், கருத்து வேறுபாடு போன்ற விஷயங்களைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைக்கும் அளவிற்கு முரணற்றதாகவும் இருக்கிறது. உங்களுடைய ‘புதிய உலக மொழிபெயர்ப்பு’ உயர்தரமான நேர்பொருள் சொல்லர்த்த (literal) மொழிபெயர்ப்பு; கிரேக்கிற்கான அதனுடைய உண்மைத்தன்மையைக் காத்துக்கொண்ட அதேசமயத்தில் மரபுவழித் திரித்துரைப்பையும் தவிர்த்திருக்கிறது. அநேக விதங்களில் இன்றைக்கு இருக்கிற திறம்பட்ட மொழிபெயர்ப்புகள் பலவற்றில் இது மேம்பட்டு இருக்கிறது.”
த கிங்டம் இண்டர்லினியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த கிரீக் ஸ்கிரிப்ச்சர்ஸ் கடவுளுடைய வார்த்தையை நேசிப்பவர்கள் பைபிளின் மூல கிரேக்க படிவத்துடன் பழக்கப்படுவதற்காக யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒவ்வொரு பக்கத்தின் இடக்கை பகுதியில் மூல கிரேக்க புதிய ஏற்பாடு உள்ளது (பி. எப். வெஸ்ட்காட், எப். ஜெ. ஏ. ஹார்ட் ஆகியோரால் தொகுக்கப்பட்டது). மூல கிரேக்க படிவத்தின் வரிகளுக்கு கீழே நேர்பொருள் சொல்லர்த்த ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதே பக்கத்தின் குறுகலான வலக்கை பகுதியில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) கொடுக்கப்பட்டுள்ளது. இது இண்டர்லினியர் மொழிபெயர்ப்பை நவீன ஆங்கில பைபிள் மொழிபெயர்ப்போடு ஒப்பிடுவதற்கு உதவுகிறது.