கிறிஸ்மஸ்—மதசார்பற்ற விடுமுறை நாளா மதசார்புடைய புனித நாளா?
சீனாவில், அவர் கிறிஸ்மஸ் தாத்தா என்றழைக்கப்படுகிறார். பிரிட்டிஷ் ஐக்கிய அரசில், அவர் கிறிஸ்மஸ் தந்தை என்று அறியப்படுகிறார். ரஷ்ய மக்கள், அவருக்கு உறைபனி தாத்தா என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள், ஐக்கிய மாகாணங்களில், அவர் சான்டா க்ளாஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறார்.
பெரிய தொந்தியையும் வெண்பனி நிற தாடியையும் கொண்ட இந்தத் தமாஷான தோற்றமுள்ள முதியவரையே கிறிஸ்மஸின் திருவுருவாக அநேகர் கருதுகின்றனர். ஆனால் சான்டா க்ளாஸ், (நவீன நாளைய துருக்கியிலுள்ள) மீறாப்பட்டணத்தின் நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த பிஷப் ஒருவரோடு சம்பந்தப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையில் உருவான ஒரு கற்பனைப் படைப்பு, ஒரு புராணக் கதை என்பதும்கூட அனைவரும் அறிந்த விஷயமே.
பழக்கவழக்கங்களும் பாரம்பரியங்களும் கொண்டாட்டங்களின்மீது எப்போதுமே பலமான செல்வாக்கைச் செலுத்தி வந்திருக்கின்றன, கிறிஸ்மஸ் இதற்கு விதிவிலக்காய் இல்லை. பிரபலமான ஒரு விடுமுறை நாளோடு பிணைக்கப்பட்ட, மக்கள் பாதுகாத்துவந்திருக்கும் பாரம்பரிய பழக்கவழக்கத்துக்கு சான்டா கட்டுக்கதை வெறும் ஓர் உதாரணமே ஆகும். கிறிஸ்மஸ் பழக்கவழக்கங்கள் பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதாக சில ஆட்கள் சொல்லிக்கொண்டாலும் இவற்றில் பெரும்பாலான பழக்கவழக்கங்கள் புறமதங்களிலிருந்து வந்தவை என்பதே உண்மை.
இன்னொரு உதாரணம் கிறிஸ்மஸ் மரமாகும். த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு சொல்கிறது: “புறமத ஐரோப்பியர்கள் மத்தியில் சாதாரணமாக இருந்த, மரத்தை வழிபடும் பழக்கம் அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய பின்னும்கூட, பிசாசை அச்சுறுத்தி விரட்டவும் கிறிஸ்மஸ் சமயத்தில் பறவைகள் தங்க ஒரு மரத்தை அளிக்கவும் புது வருடத்தில் இலையுதிராத மரங்களைக் கொண்டு வீட்டையும் களஞ்சியங்களையும் அலங்கரிக்கும் ஸ்காண்டிநேவிய பழக்கமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.”
முள் இலைகளையும் சிறு மலர்களையும் சிவப்புப் பழங்களையும் உடைய புதர்ச் செடியினால் அல்லது மற்ற பசுமை மாறாத செடியினால் வளையங்களைச் செய்வது மற்றொரு பிரசித்திப் பெற்ற கிறிஸ்மஸ் பாரம்பரியம். இதுவும்கூட புறமத வணக்கத்தில் ஆழமாக வேர்கொண்டிருக்கிறது. பண்டைய ரோமர்கள் குளிர்கால மத்திபத்தில் வேளாண்மைத் தெய்வத்திற்கென்று கொண்டாடிய ஏழுநாள் திருவிழாவின்போது கோவில்களை அலங்கரிக்க முள் இலைகளையும் சிறு மலர்களையும் சிவப்புப் பழங்களையும் உடைய புதர்ச் செடியின் கிளைகளைப் பயன்படுத்தினர். இந்தப் புறமத திருவிழா கட்டுப்பாடற்ற களியாட்டத்துக்கும் வரம்புமீறிய நடத்தைக்கும் விசேஷமாக பேர்போனதாக இருந்தது.
(இங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும்) புல்லுருவி கிளையின்கீழ் முத்தஞ்செய்துகொள்ளும் கிறிஸ்மஸ் பழக்கம் சிலருக்கு ஒருவேளை காதலின் அடையாளமாக தோன்றலாம், ஆனால் அது வரலாற்றின் இடை காலத்திற்கு மீண்டும் கொண்டு செல்வதாகவே உள்ளது. பண்டைய பிரிட்டனில் வாழ்ந்துவந்த கெல்டிக் இனத்தவர் புல்லுருவிக்கு மந்திர சக்தி இருந்ததாக நம்பினர்; ஆகவே, அது பேய்களுக்கும், வசிய ஆற்றலுக்கும் இன்னும் மற்ற வகையான பொல்லாங்குகளுக்கும் எதிராக பாதுகாப்பிற்கென்று பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில், முள் இலைகளையும் சிறு மலர்களையும் சிவப்புப் பழங்களையும் உடைய புதர்ச் செடியின்கீழ் முத்தஞ்செய்து கொண்டால் அது திருமணத்துக்கு வழிநடத்தும் என்ற மூட நம்பிக்கை தோன்றியது. கிறிஸ்மஸ் சமயத்தில் இப்படிப்பட்ட நம்பிக்கை இன்னும் சில ஆட்கள் மத்தியில் பிரபலமாயுள்ளது.
இவை புறமத போதனைகளிலிருந்து நேரடியாக தோன்றியிருக்கும் அல்லது அதனால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கும் நவீன நாளைய கிறிஸ்மஸ் பாரம்பரியங்களில் சில ஆகும். ஆனால் இவை எல்லாம் எப்படி வந்தன என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். கிறிஸ்துவின் பிறப்பைக் கௌரவிப்பதற்காக என்று உரிமைபாராட்டும் ஒரு விடுமுறை நாள் எவ்வாறு கிறிஸ்தவமல்லாத பழக்கங்களோடு பின்னிப்பிணைந்தது? இன்னும் முக்கியமாக, கடவுள் இந்தக் காரியத்தை எவ்வாறு கருதுகிறார்?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
பக்கம் 3: சான்டா க்ளாஸ்: Thomas Nast/Dover Publications, Inc., 1978; பக்கம் 3-ல் உள்ள புதர்ச்செடி மற்றும் பக்கம் 4-ல் உள்ள விளக்கப்படம்: Discovering Christmas Customs and Folklore by Margaret Baker, published by Shire Publications, 1994