நன்மையில் முடிந்த தூக்கமில்லா அந்த இரவுகள்
ராஜாக்களுக்கும்கூட தூக்கமில்லா இரவுகள் உண்டு. பொ.ச.மு. ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்துவந்த வலிமையுள்ள பெர்சிய அரசனாகிய அகாஸ்வேரு அப்படிப்பட்ட ஓர் இரவைக் கழித்தார். ஒருவேளை ஏதோவொரு கடமையில் தான் தவறிவிட்டதாக உணர்ந்தவராய், அரசவையின் பதிவுகளைத் தனக்கு வாசித்துக் காட்டும்படியாக அவர் கேட்டார். கொலை சதித்திட்டம் ஒன்றை உண்மையுள்ள ஒரு வேலைக்காரனாகிய மொர்தெகாய் தோல்வியடையச் செய்திருந்தார், ஆனால் அதற்காக அவருக்கு வெகுமதி அளிக்கப்படவில்லை. தெரியாமல் விடுபட்ட இந்த விஷயத்தை உடனடியாக சரிசெய்வதற்கு அகாஸ்வேரு தீர்மானித்தார். கடவுளுடைய ஜனங்கள்மீது ஏற்பட்ட அவருடைய செயல்களின் நன்மையான விளைவுகள் ராஜாவின் தூக்கமின்மைக்கு கடவுள் காரணமாயிருந்தார் என்பதைக் காட்டுகின்றன.—எஸ்தர் 6:1-10.
ஹெர்மேனஸ் என்ற தென் ஆப்பிரிக்க கரையோர பட்டணத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபையினருக்கு பைபிளின் இந்தப் பகுதியை நினைவுகூருவதற்கு காரணமிருக்கிறது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு மன்றத்தில் வழக்கமாக கூடிவந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாக ஒரு ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு நிலம் வாங்க பல வருடங்களாக முயற்சி செய்திருந்தார்கள். கடைசியாக 1991-ல் டவுண் கவுன்சில் அவர்களுக்கு மிகச் சிறந்த ஓரிடத்தை கொடுக்க முன்வந்தது.
இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்த இடத்தை விற்பதை சிலர் எதிர்த்தனர். பல மாத கால தாமதத்திற்குப்பின், சர்ச்சுகளுக்கு நிலத்தை விற்பதன்பேரில் மூன்றாண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதாக (moratorium) சபைக்குத் தெரிவிக்கப்பட்டது; அதனால் அந்த இடத்தை கொடுப்பது வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. மே 1993-ல் சபை மறுபடியுமாக கவுன்சிலுக்கு எழுதி, அதன் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தடை இன்னும் அமலில் இருப்பதாக குறிப்பிடப்பட்ட ஒரு-வரி கடிதத்தை அவர்கள் பெற்றார்கள்.
அந்த வருடம் அக்டோபர் மாதம் டவுண் கவுன்சிலராக இருக்கும் ஒரு பெண்மணி தூக்கமில்லாமல் ஓரிரவைக் கழித்தார்கள். ஏதாவது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இருக்கின்றனவா என்பதைப் பார்க்க பழைய கவுன்சில் கூட்டங்களின் செயல்நடவடிக்கைக் குறிப்புகளைப் பார்வையிட்டு கொண்டிருப்பதில் அவர் தன் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தார். கவுன்சில் அதன் முடிவை மறுபரிசீலனைச் செய்யும்படியாக கேட்டு சாட்சிகள் எழுதிய கடிதம் அவர் கண்ணில்பட்டது. ஆகவே இந்த விஷயத்தை தங்களுடைய அடுத்தக் கூட்ட அஜண்டாவில் வைக்கத் தீர்மானித்தார். சர்ச்சுகளுடைய சொத்துக்களின் பேரில் போடப்பட்டிருந்த தடை வருவதற்கு முன்பே யெகோவாவின் சாட்சிகள் நிலத்துக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்ட விரும்பினார்.
சரியான நேரத்தில், 1991-ல் முதலாவதாக கொடுக்க முன்வந்த அதே நிலம் சபைக்கு ஒதுக்கப்பட்டது! சபை அங்கத்தினர்களும் அக்கறையுள்ளவர்களும் எளிதாக வந்துசேரத்தக்க பிரதான சாலையில் அது அமைந்திருக்கிறது. அவர்கள் நேர்த்தியான ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டியிருக்கிறார்கள்; இது அக்டோபர் 5, 1996-ல் யெகோவாவுக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தூக்கமின்றி கழித்த இரவினால் கவுன்சிலருக்கு ஏற்பட்ட அசெளகரியத்தைக் குறித்து சபையினர் வருத்தப்படும் அதே சமயத்தில், அகாஸ்வேரு ராஜாவும்கூட தூக்கமில்லா ஓர் இரவைக் கழித்ததை எண்ணி அந்த கவுன்சிலர் ஆறுதலடையலாம். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட விளைவு நன்மையில் முடிந்தது. ஹெர்மேனஸ் சபையானது பிரபலமான இந்தக் கரையோரப் பட்டணத்தில் மெய் வணக்கத்துக்கும் தேவராஜ்ய பயிற்றுவிப்புக்கும் மையமாக இருக்கும் தங்களுடைய சொந்த ராஜ்ய மன்றத்தை உடையதாயிருப்பதற்கு நிச்சயமாகவே அதிக நன்றியுள்ளதாக இருக்கிறது.—எபிரெயர் 10:24, 25.