யாருடைய வாக்குறுதிகளை நீங்கள் நம்பலாம்?
எதிர்காலத்தைப் பற்றி கலந்துபேச 1893-ல் சமூக கருத்துரையாளர்கள் 74 பேர் சிக்காகோ உலக கண்காட்சியில் ஒன்றுகூடினர். (அந்த இடம் மேலே காண்பிக்கப்பட்டுள்ளது) 100 வருடங்களுக்கு அப்பால் 1993-க்கு முன்னோக்கிப் பார்ப்பவர்களாய், அவர்கள் செய்த ஒருசில முன்கணிப்புகள் வருமாறு: “அநேக ஆட்கள் 150 வருடங்கள் வரை வாழ்வார்கள்.” “சிறைச்சாலைகள் குறைந்துவிடும், திருமண விலக்கு அவசியமற்றதாக கருதப்படும்.” “உண்மையான வளர்ச்சி எப்பொழுதும் எளிமையை நோக்கிச் செல்வதால் அரசியல் சட்டங்கள் மேலும்மேலும் எளிதாக்கப்பட்டிருக்கும்.”
அதேவிதமாகவே, ஆண்டு 2000 என்று தலைப்பிடப்பட்ட ஒரு ஆங்கில புத்தகம் 1967-ல் பின்வருமாறு முன்னறிவித்தது: “2000-ம் ஆண்டிற்குள், அநேகமாக கம்ப்யூட்டர்கள் ‘மனிதனைப் போன்றே’ புத்திக்கூர்மையுள்ள திறமைகள் சிலவற்றிற்கு இணையாக ஆகிவிடும், அவற்றின் இடத்தை பிடித்துக்கொள்ளும் அல்லது அவற்றையே மிஞ்சிவிடும்; ஒருவேளை அவற்றில் அவனது ரசனைகளும் படைக்கும் திறமைகளும் அடங்கும்.” பெரும்பாலான வீட்டு வேலையை செய்துவிடும் ஓரளவு குறைந்த விலை ரோபோட்டுகள் . . . 2000 வருடத்திற்குள் இருக்கும் என்ற கருத்து அதிக நியாயமானதாக தோன்றுகிறது.”
எதிர்கால சம்பவங்களை முன்கணிக்க முடியாதிருக்கும் மனிதனின் திறமை கடவுளுடைய திறமைக்கு நேர் எதிராக இருக்கிறது. உதாரணமாக, மேலே கூறப்பட்ட முன்னறிவிப்புகளை நம்முடைய நாளின் சம்பந்தமாக பைபிள் ஏறக்குறைய 20 நூற்றாண்டுகளுக்கு முன்பாக முன்னுரைத்ததோடு ஒப்பிட்டுப்பாருங்கள்: “மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-5.
‘கடைசி நாட்களைப்’ பற்றிய இந்த பைபிள் தீர்க்கதரிசனம், நம்முடைய நாளில் நிறைவேற்றமடைந்திருக்கும் அநேக தீர்க்கதரிசனங்களில் ஒன்றே. இயேசுவினுடைய வந்திருத்தலின் “அடையாளம்” உலகப் போர், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், நில நடுக்கங்கள் மற்றும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல் ஆகியவற்றை உட்படுத்தும் என்பதாக கடவுளுடைய வார்த்தை முன்னுரைத்தது.—மத்தேயு 24:3-14; லூக்கா 21:11.
இம்மியும் பிசகாத கடவுளுடைய வாக்குறுதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு பைபிள் எழுத்தாளரை பின்வருமாறு அறிவிக்கத் தூண்டியது: ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் [யெகோவா] உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.’—யோசுவா 23:14.
ஆம், கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேறும் என்பதாக நாம் நிச்சயமாயிருக்கலாம். கடவுளுடைய ராஜ்யம் நோய், குற்றச்செயல், போதைப்பொருளுக்கு அடிமையாதல், பசி, போர் ஆகியவற்றிற்கு முடிவைக் கொண்டுவரும்; இந்த முழு பூமியும் பரதீஸாக மாறும். (சங்கீதம் 37:10, 11, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4) இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நீங்கள் நம்பலாம்! “பொய்யுரையாத” நம்முடைய படைப்பாளரிடமிருந்து இது வருகிறது.—தீத்து 1:3; ஒப்பிடுக: எபிரெயர் 6:13-19.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Cleveland State University Archive