வாழ்க்கை பாதையில் உங்களை வழிநடத்திட ஒரு தீபம்
“கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) இவ்வாறு சொல்வதன் மூலம், வாழ்க்கை என்னும் பாதையில் உதவியின்றி மனிதர்களால் வெற்றிகரமாக செல்ல முடியாது என்பதை தீர்க்கதரிசி எரேமியா சுட்டிக்காட்டினார். அத்தகைய உதவி எங்கே கிடைக்கும்? சங்கீதக்காரன், யெகோவாவிடம் தன் ஜெபத்தை ஏறெடுக்கையில் இதற்கான விடையை இவ்வாறு அளிக்கிறார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”—சங்கீதம் 119:105.
கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளைப் படித்து, அது சொல்வதன்படி நடக்க முடிவெடுத்தவர்கள், அதிகாலையில் பயணப்படும் ஒருவரைப் போல் உணருவார்கள். முதலில் இருட்டாக இருப்பதால், அவரால் சரிவர பார்க்க முடியாது. ஆனால், கதிரவன் உதயம் ஆக ஆரம்பித்தவுடன், அவர் அதிக அதிகமாக பார்க்கிறார். கடைசியில் சூரியன் உச்சந்தலையில் சுரீர் என்று அடிக்கும். அவர் எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக பார்க்கிறார். இத்தகைய உவமை, பைபிளின் ஒரு நீதிமொழியை நினைவிற்கு கொண்டுவருகிறது: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.”—நீதிமொழிகள் 4:18.
கடவுளுடைய வழிநடத்துதலை ஒதுக்கித்தள்ளுவோரைப் பற்றி என்ன? பைபிள் சொல்கிறது: “துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.” (நீதிமொழிகள் 4:19) ஆம், கொடியவர்கள், இருட்டில் தட்டுத்தடுமாறும் மனிதனைப்போல் இருக்கிறார்கள். சாதகமான காலங்களில்கூட அவர்களது வெற்றியென தோன்றுபவை வெறும் தற்காலிகமானவை. ஏனென்றால், “கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.”—நீதிமொழிகள் 21:30.
ஆகவே, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் வழிநடத்துதலைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவ்வாறு பின்பற்றினால், நீதிமொழிகள் 3:5, 6-ல் சொல்லப்பட்ட பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை கண்டுணர்வீர்கள்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”