ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
கடவுளுடைய வார்த்தையின் தூய்மையாக்கும் ஆற்றல்
பெரும்பாலான போதை மருந்து அடிமைகள், மறுவாழ்வு இல்லங்களிலிருந்து திரும்பி வந்தவுடன், மீண்டும் அவர்களுடைய பழைய பழக்கங்களுக்கே போய்விடுகின்றனர் என்பதாக அறிக்கை செய்யப்படுகிறது. ஆனால் பொதுவாகவே மருத்துவமனைகள் செய்ய முடியாததை கடவுளுடைய வார்த்தை சாதித்துவிடுகிறது. (எபிரெயர் 4:12) போதை மருந்து பழக்கத்திலிருந்து விடுபட அநேக ஆட்களுக்கு கடவுளுடைய வார்த்தையும் அவரது ஆவியும் உதவி உள்ளன; அவர்கள் பின்வரும் ஆலோசனையை வாழ்க்கையில் பொருத்துகிறார்கள்: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.”—2 கொரிந்தியர் 7:1.
இதற்கான உதாரணத்தை மயன்மாரிலிருந்து வரும் பின்வரும் அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. போதை மருந்தின் கொடும்பிடியில் பல வருடங்களாக சிக்கித் தவித்த ஓர் ஆள் இவ்வாறு விவரிக்கிறார்: “என் பருவ வயதிலேயே போதை மருந்துக்கு நான் அடிமையானேன். அதிலிருந்து விடுபட நான் பல முறை முயன்று பார்த்தேன், ஆனால் என்னால் முடியவேயில்லை. போதைமருந்து வாங்குவதற்காக நான் திருடவும் துணிந்துவிட்டேன். அதன் காரணமாக, 1988-ல் ஒரு வருடம் என்னை ஜெயிலில் போட்டார்கள்.
“நான் ஜெயிலிலிருந்து விடுதலையாகி வந்தவுடன், மறுபடியும் என்னுடைய பழைய நண்பர்களோடு சேர்ந்துகொண்டேன். அதற்குபின், விரைவிலேயே மீண்டும் பழையபடி போதைமருந்து பழக்கத்தை மேற்கொண்டேன். தன்னையே அழித்துக்கொள்ளும் என்னுடைய போக்கைப் பார்த்த குடும்ப அங்கத்தினர்கள் என்னோடு எந்தவித ஒட்டு உறவும் வேண்டாம் என்று முற்றிலுமாக உறவை முறித்துக்கொண்டார்கள். போதாக்குறைக்கு, என்னுடைய முரட்டு சுபாவத்தைப் பார்த்து, சமூகத்தில் உள்ள பலர் பயந்தார்கள்; அதனால் அவர்களும் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
“ஒரு நாள் தவிர்க்க முடியாத ஒன்று நடந்தது—நான் அளவுக்கு அதிகமாக போதை மருந்தை சாப்பிட்டதால் அவதிப்பட்டேன். என்னை மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்பினார்கள், இந்த முறை மூன்று வருடங்களுக்கு. ஜெயில் வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருந்தாலும்கூட, எப்படியோ நான் பிழைத்துக்கொண்டேன்.
“நான் ஜெயிலிலிருந்து வீடு திரும்பி வந்ததும், நான் முன்பு செய்த தவறுகளையெல்லாம் மன்னிக்கும்படி என் குடும்பத்தாரிடம் மன்றாடினேன். அவர்களும் பெரிய மனதோடு என்னை மீண்டும் ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் என்னுடைய கூட்டாளிகள் மறுபடியும் பழைய வழிகளுக்கு திரும்பும்படி என்னை சிக்கவைத்தார்கள்.
“கடைசியாக, என்னுடைய பாட்டி, நான் பைபிள் வகுப்புக்கு போகும்படி உள்ளூரில் உள்ள ஒரு பாஸ்டரை என்னிடம் சிபாரிசு செய்தார். அந்தப் பாஸ்டரும் ஒத்துக்கொண்டார். ஆனால், நான் வகுப்புக்கு போகும் முன்பே, யெகோவாவின் சாட்சிகளுள் ஒருவராக இருக்கும் என்னுடைய ஆன்ட்டி, பைபிளை கற்றுக்கொள்ள உண்மையிலேயே விரும்புகிறேன் என்றால், நான் யெகோவாவின் சாட்சிகளிடத்தில் படிக்கவேண்டும் என்று கூறினார்.
“நான் ராஜ்ய மன்றத்திற்கு போனேன். என்னை ஒருவரிடத்தில் அறிமுகம் செய்தார்கள், என்னோடு பைபிள் படிக்க அவர் ஒத்துக்கொண்டார். கூடியிருந்தவர்கள் பலரும் எனக்கு கனிவோடு வாழ்த்துதல் சொன்னார்கள், நான் வரவேற்கப்பட்டவனாக உணரும்படி செய்தார்கள்.
“நான் பைபிள் படிக்கவும், கூட்டங்களுக்கு போகவும் ஆரம்பித்த பிறகு, போதை மருந்துக்காக எனக்கிருந்த ஆசை, கடவுளிடம் நெருங்கி சேரவேண்டும் என்ற ஆசையினிடமாக திசை மாறிவிட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு, என் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் செய்து, என்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் வெளிக்காட்டினேன்.
“சமீபத்தில், நான் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு போனபோது, என்னுடைய பழைய கூட்டாளி ஒருவனை சந்தித்தேன். நான் செய்திருந்த பெரும் மாற்றத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. இது சாட்சிக்கொடுப்பதற்கான வாய்ப்பை அளித்தது, அவனிடத்தில் ராஜ்ய நம்பிக்கையைப் பற்றி என்னால் பேச முடிந்தது.
“ஒருவழியாக, வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும், அர்த்தத்தையும் நான் கண்டுகொண்டேன். கடவுளுடைய உதவிக்கும் அவருடைய வார்த்தையின் ஆலோசனைக்கும் மிக்க நன்றி. போதை மருந்து பழக்கம் என்னும் இந்தத் துர்ப்பழக்கத்திலிருந்து மற்றவர்கள் வெளிவர இப்போது நான் உதவிசெய்து வருகிறேன்.”